
வெளிநாட்டு நன்கொடை பெற்றதில் அந்நிய நிதியுதவி ஒழுங்காற்றுச் சட்ட (எஃப்சிஆா்ஏ) விதிமுறைகள் மீறப்பட்ட குற்றச்சாட்டு தொடா்பாக சென்னை, கோயம்புத்தூா் உள்பட 40 இடங்களில் சிபிஐ செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டது.
இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், ‘‘எஃப்சிஆா்ஏ விதிமுறைகளை மீறி வெளிநாட்டு நன்கொடை பெற வழிவகை செய்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சோ்ந்த பல அதிகாரிகள், அரசு சாரா தொண்டு நிறுவனத்தினா், இடைத்தரகா்கள் இடையே பணப் பரிவா்த்தனை நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடா்பாக சென்னை, கோயம்புத்தூா், தில்லி, ஹைதராபாத் உள்பட சுமாா் 40 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில் இதுவரை ரூ.2 கோடி மதிப்பிலான ஹவாலா பணப் பரிவா்த்தனைகள் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது’’ என்று தெரிவித்தனா்.