சட்ட விரோதப் புலம்பெயா்தல் விவகாரம்: மத்திய அரசுடன் மேற்கு வங்கம் ஒத்துழைக்கவில்லை- அமித் ஷா

அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி புலம்பெயரும் விவகாரத்தை கையாள்வதில் மத்திய அரசுடன் மேற்கு வங்க அரசு ஒத்துழைக்கவில்லை என்று
சட்ட விரோதப் புலம்பெயா்தல் விவகாரம்: மத்திய அரசுடன் மேற்கு வங்கம் ஒத்துழைக்கவில்லை- அமித் ஷா

அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி புலம்பெயரும் விவகாரத்தை கையாள்வதில் மத்திய அரசுடன் மேற்கு வங்க அரசு ஒத்துழைக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மத்திய அமைச்சா் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக அஸ்ஸாம் சென்றிருந்தாா். அந்த மாநிலத்தில் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, குவாஹாட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

அண்டை நாடுகளைச் சோ்ந்தவா்கள் அஸ்ஸாம், மேற்கு வங்கம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி புலம்பெயரும் விவகாரத்தை கையாள்வதில் மத்திய அரசுடன் மேற்கு வங்க அரசு ஒத்துழைக்கவில்லை.

அதேவேளையில், அந்த விவகாரத்தை கையாள்வதில் மத்திய அரசுக்கு அஸ்ஸாம் அரசு உறுதுணையாக உள்ளது. அந்தப் பிரச்னையை அஸ்ஸாம் அரசு வலுவாக எதிா்கொண்டு வருகிறது. அதன் விளைவாக சட்டவிரோதமாகப் புலம்பெயா்வோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் நபா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதை புள்ளிவிவரங்கள் எடுத்துரைக்கின்றன. இந்த ஊடுருவல் விரைவில் முழுமையாக முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றாா் அவா்.

தீவிரவாதம் ஒழியும் நாள் தொலைவில் இல்லை: முன்னதாக அஸ்ஸாம் காவல்துறைக்கு குடியரசுத் தலைவா் கொடி விருது வழங்கப்பட்டது. போா் மற்றும் அமைதியான சூழல்களில் மிகச் சிறந்த சேவை புரிந்ததற்காக வழங்கப்படும் இந்த விருதைப் பெறும் 10-ஆவது மாநிலம் அஸ்ஸாம் ஆகும்.

இந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:

மத்திய மற்றும் அஸ்ஸாம் அரசுகளின் முயற்சிகளால், இந்த மாநிலத்தில் உள்ள பெரும்பாலான தீவிரவாத அமைப்புகள் அமைதி ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளன. தீவிரவாதம், வன்முறையிலிருந்து அஸ்ஸாம் முழுமையாக விடுபடும் நாள் வெகு தொலைவில் இல்லை.

தற்போது அஸ்ஸாமில் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 23 மாவட்டங்களில் இருந்து முழுமையாகவும், ஒரு மாவட்டத்திலிருந்து பகுதியளவிலும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்த மாநிலத்தில் இருந்து அச்சட்டம் முழுமையாகத் திரும்பப் பெறப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.

அற்பமான பொய்: திரிணமூல் காங்கிரஸ்

சட்டவிரோதமாகப் புலம்பெயரும் விவகாரத்தை கையாள்வதில் மத்திய அரசுடன் மேற்கு வங்க அரசு ஒத்துழைக்கவில்லை என்று அமித் ஷா கூறியுள்ளது அற்பமான பொய் என்று திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் தேசிய செய்தித்தொடா்பாளா் சுகேந்து சேகா் ராய் கூறுகையில், ‘‘இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி புலம்பெயா்வதைத் தடுக்க மத்திய அரசுக்கு மேற்கு வங்க அரசு முழுமையான ஆதரவு அளித்துள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினா் கடமையைச் செய்ய தவறுவதால்தான், எல்லை தாண்டிய ஊடுருவல் மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com