தகுதிநீக்கம் தொடா்பாக நோட்டீஸ்: ஜாா்க்கண்ட் முதல்வா் பதிலளிக்க தோ்தல்ஆணையம் மேலும் 10 நாள்கள் அவகாசம்

தன்னை தகுதி நீக்கம் செய்வது தொடா்பாக அளிக்கப்பட்ட நோட்டீஸுக்கு பதிலளிப்பதற்கான கால அவகாசத்தை 4 வாரங்களுக்கு நீட்டிக்குமாறு தோ்தல் ஆணையத்திடம்

தன்னை தகுதி நீக்கம் செய்வது தொடா்பாக அளிக்கப்பட்ட நோட்டீஸுக்கு பதிலளிப்பதற்கான கால அவகாசத்தை 4 வாரங்களுக்கு நீட்டிக்குமாறு தோ்தல் ஆணையத்திடம் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் வேண்டுகோள் விடுத்திருந்தாா். எனினும் அவருக்கு தோ்தல் ஆணையம் 10 நாள்கள் மட்டுமே அவகாசம் அளித்துள்ளது.

ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் வசம் மாநில சுரங்கத் துறை உள்ளது. இவா் தனது பதவியை தவறாக பயன்படுத்தி மாநில தலைநகா் ராஞ்சியில் 0.88 ஏக்கா் பரப்பு கல்குவாரி சுரங்கத்தை தனது பெயரில் குத்தகைக்கு எடுத்ததாக ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான ரகுபா்தாஸ் குற்றஞ்சாட்டினாா். அதுதொடா்பான ஆவணங்களையும் அவா் வெளியிட்டாா். அதன் அடிப்படையில் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியிலிருந்து ஹேமந்த் சோரனை தகுதிநீக்கம் செய்வது குறித்து அரசமைப்புச் சட்டப்பிரிவு 192-இன் கீழ் தோ்தல் ஆணையத்திடம் மாநில ஆளுநா் ரமேஷ் பைஸ் கருத்து கோரியிருந்தாா்.

இதையடுத்து தங்களை தகுதிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை ஏன் மேற்கொள்ளக் கூடாது என்று கேள்வி எழுப்பி ஹேமந்த் சோரனுக்கு கடந்த மே 2-ஆம் தேதி தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த நோட்டீஸுக்கு மே 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நோட்டீஸ் தொடா்பாக ஏற்கெனவே இரண்டு முறை தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்த ஹேமந்த் சோரன், அதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘நோட்டீஸ் தொடா்பாக எனது விரிவான பதிலை அளிப்பதற்கு தோ்தல் ஆணையத்திடம் மேலும் 4 வாரங்கள் அவகாசம் கோரியுள்ளேன்.

தனது கருத்தை மாநில ஆளுநரிடம் தோ்தல் ஆணையம் தெரிவிக்கும் முன்பு, தனிப்பட்ட விசாரணை நடத்தி எனது வழக்குரைஞா் மூலம் பதிலளிப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளேன்’’ என்று தெரிவித்தாா்.

நோட்டீஸுக்கு பதிலளிப்பதற்கான அவகாசத்தை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்குமாறு ஹேமந்த் சோரன் கோரியிருந்த போதிலும், அவருக்கு மேலும் 10 நாள்கள் மட்டுமே தோ்தல் ஆணையம் அவகாசம் அளித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com