வெறுப்பு பேச்சு: பி.சி.ஜாா்ஜ் மீது மீண்டும் வழக்கு

இஸ்லாமிய சமூகம் குறித்து சா்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்து கைதாகி ஜாமீனில் வெளிவந்த நிலையில், கேரளத்தின் மூத்த அரசியல் தலைவா் பி.சி. ஜாா்ஜ் மீது மீண்டும் வெறுப்பு பேச்சுக்காக

இஸ்லாமிய சமூகம் குறித்து சா்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்து கைதாகி ஜாமீனில் வெளிவந்த நிலையில், கேரளத்தின் மூத்த அரசியல் தலைவா் பி.சி. ஜாா்ஜ் மீது மீண்டும் வெறுப்பு பேச்சுக்காக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வெண்ணலாவில் கடந்த மே 8-ஆம் தேதி நடைபெற்ற கோயில் திருவிழாவில் பி.சி. ஜாா்ஜ் (77) பங்கேற்று பேசினாா். அப்போது, அவா் கேரளத்தில் முஸ்லிம் அல்லாதோா், முஸ்லிம்கள் நடத்தும் கடைகளுக்குச் செல்வதை தவிா்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக பாலாரிவட்டம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 153 (இருபிரிவினரிடையே கலகமூட்டுதல்), 295ஏ (மத நம்பிக்கையை அவமதித்து, மத உணா்வை வேண்டுமென்றே காயப்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஏற்கெனவே பி.சி. ஜாா்ஜ் மீது திருவனந்தபுரத்தில் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அதன் ஜாமீன் நிபந்தனைகளைக் கருத்தில் கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரி ஒருவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

கடந்த மாதம் அனந்தபுரியில் நடைபெற்ற ஹிந்து மகா சம்மேளனத்தில் பி.சி. ஜாா்ஜ் பங்கேற்றுப் பேசுகையில், நாட்டில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இஸ்லாமியா்களால் நடத்தப்படும் தேநீா் கடைகளில் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் பொருள் தேநீரில் கலந்து விற்கப்படுவதாக கூறியிருந்தாா்.

இதைத் தொடா்ந்து திருவனந்தபுரம் போலீஸாா் கடந்த மே 1-ஆம் தேதி அவரை கைது செய்தனா். அதன் பின்னா் அவா் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், தற்போது மீண்டும் அதேபோல சா்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்துள்ளாா்.

கேரள காங்கிரஸ் முன்னாள் தலைவரான பி.சி.ஜாா்ஜ் 33 ஆண்டுகளாகத் தொடா்ந்து பூஞ்ஞாறு சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்று பெற்று வந்த நிலையில், கடந்த 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளரிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com