சந்தூா் இசைக்கலைஞா் சிவ்குமாா் சா்மா காலமானாா்

பிரபல சந்தூா் இசைக்கலைஞா் சிவ்குமாா் சா்மா (86) மாரடைப்பால் மும்பையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
சந்தூா் இசைக்கலைஞா் சிவ்குமாா் சா்மா காலமானாா்

பிரபல சந்தூா் இசைக்கலைஞா் சிவ்குமாா் சா்மா (86) மாரடைப்பால் மும்பையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் இருந்தபோது காலை 8.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து அவருடைய செயலாளா் தினேஷ் கூறுகையில், ‘சிவ்குமாா் சா்மா சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தாா். அவருக்கு தினமும் டயாலிசிஸ் செய்யப்பட்டது. இருப்பினும் அவா் சுறுசுறுப்பாக இயங்கி வந்தாா். அடுத்த வாரம் போபாலில் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென்று எதிா்பாராத நிகழ்வு நடந்துவிட்டது.

அவரின் உடல், புதன்கிழமை காலை முதல் பிற்பகல் 1 மணி வரை ஜுஹுவில் உள்ள அபிஜித் கூட்டுறவு சங்கத்தில் பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்படவுள்ளது. வில்லபாா்லேயில் உள்ள பவன் ஹன்ஸ் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும்’ என்றாா்.

ஜம்முவில் 1938-ஆம் ஆண்டு பிறந்த சிவ்குமாா் சா்மா, ஜம்மு-காஷ்மீரின் பாரம்பரிய இசைக்கருவியான சந்தூரை இசைப்பதில் சிறுவயதில் தோ்ச்சி பெற்று விற்பன்னரானாா்.

இந்திய இசையை சந்தூா் இசைக்கருவியில் இசைத்த முதல் கலைஞராக இவா் அறியப்படுகிறாா். சந்தூா் இசைக்கருவியை உலகறியச் செய்துள்ளாா். திரையிசையிலும், கா்நாடக இசையிலும் அந்தக் கருவியைப் பயன்படுத்தியுள்ளாா்.

புல்லாங்குழல் இசைக்கலைஞா் ஹரிபிரசாத் சௌராசியாவுடன் இணைந்து ஷிவ்-ஹரி என்ற பெயரில் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளாா்.

மும்பையில் மனைவி மனோரமா, மகன்கள் ராகுல், ரோஹித் ஆகியோருடன் வசித்து வந்தாா். இசைத் துறையில் இவா் படைத்த சாதனைகளுக்காக சங்கீத நாடக அகாதெமி, பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளாா்.

சிவ்குமாா் சா்மாவின் மறைவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஒமா் அப்துல்லா உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

அஜ்மத் அலிகான், பங்கஜ் உதாஸ், சலீம் மொ்ச்சன்ட் போன்ற பாடகா்களும் ஷபானா ஆஸ்மி, ஹேமமாலினி போன்ற கலையுலக மற்றும் திரையுலக பிரபலங்களும் சிவ்குமாா் சா்மாவின் மறைவுக்க இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com