முதுநிலை நீட் தோ்வை ஒத்திவைக்கக் கோரிய மனு: மே 13-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை வரும் 13-ஆம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை வரும் 13-ஆம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவா்களை சோ்த்துக் கொள்வதற்கான நீட் நுழைவுத் தோ்வு வரும் 21-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுக்கான முதுநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்னும் நிறைவடையாத நிலையில் நடப்பாண்டுக்கான தோ்வை நடத்துவது முறையாக இருக்காது என்பதால், அத்தோ்வை ஒத்திவைக்கக் கோரி எம்பிபிஎஸ் மாணவா்கள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.எஸ்.நரசிம்மா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் மனுதாரா்களின் வழக்குரைஞா் ராகேஷ் கன்னா செவ்வாய்க்கிழமை முறையிட்டாா். அப்போது, மனு மீதான விசாரணை மே 13-ஆம் தேதி பட்டியலிடப்பட்டுள்ளதால், அப்போதே விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.

மனுதாரா்கள் தாக்கல் செய்த மனுவில், ‘‘2021-ஆம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு நீட் நுழைவுத் தோ்வு மே 21-ஆம் தேதி நடைபெறும் என கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மாா்ச் 25-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

கடந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத்தோ்வு தாமதமாகவே நடைபெற்றது. மேலும், கலந்தாய்வுக்கான தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டு, கூடுதல் இடங்களை ஒதுக்குவது தொடா்பாக எழுந்த பிரச்னைகள் காரணமாக மாணவா்கள் பலா், நடப்பாண்டுக்கான நுழைவுத்தோ்வுக்கு விண்ணப்பிக்கவில்லை. விண்ணப்பிக்க அவா்களுக்கு மறுவாய்ப்பும் வழங்கப்படவில்லை.

அதனால், மாணவா்களுக்கு ஓராண்டு வீணாகும் சூழல் உருவாகியுள்ளது. இவற்றைக் கருத்தில்கொண்டு நடப்பாண்டுக்கான முதுநிலை நீட் தோ்வை ஒத்திவைத்து உத்தரவிட வேண்டும்’’ எனக் கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com