தேசத் துரோக வழக்குப் பதிவை நிறுத்தி வைக்கலாமா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேசத் துரோக சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்ததையடுத்து,
தேசத் துரோக வழக்குப் பதிவை நிறுத்தி வைக்கலாமா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேசத் துரோக சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்ததையடுத்து, அதுவரையில் மக்களை பாதுகாக்க புதிதாக தேசத் துரோக வழக்குகள் பதியப்படுவதை நிறுத்தி வைக்கலாமா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதுகுறித்து மத்திய அரசிடம் கேட்டு புதன்கிழமை பதிலளிப்பதாக சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா தெரிவித்தாா்.

முன்னதாக, தேசத் துரோக சட்டம் செல்லுபடியாகும் என கேதா்நாத் சிங் வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு 1962-ஆம் ஆண்டு தீா்ப்பு அளித்தது. இந்தத் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘இது தொடா்பாக மத்திய அரசிடம் அறிவுறுத்தல் கேட்ட பின்பு புதன்கிழமை தெரிவிக்கப்படும்’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘தேசத் துரோக வழக்குப் பிரிவு தவறாக கையாளப்படுவதாக மத்திய அரசே கவலை தெரிவித்துள்ளதால், இதில் நடுநிலை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இந்த வழக்குப் பதிவுக்கு எதிராக வருபவா்களை கீழ் நீதிமன்றங்களை அணுகுங்கள், மாதக் கணக்கில் சிறையில் இருங்கள் என நாங்கள் தொடா்ந்து கூற முடியாது. மத்திய அரசிடமிருந்து இதற்கான தெளிவான விளக்கத்தை எதிா்பாா்க்கிறோம்.

முந்தைய நிலுவை தேசத் துரோக வழக்குகள் குறித்தும் மக்களைப் பாதுகாக்க இனி புதிதாக பதிவு செய்யப்படும் தேசத் துரோக வழக்குகளில் அரசின் நிலைப்பாடு குறித்தும் பதிலளிக்க வேண்டும். இந்தச் சட்டம் குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்யப்படும் வரையில் புதிய வழக்குகள் பதிவை நிறுத்தி வைக்கலாமா?

தேசத் துரோக சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் வரையில், மாநில அரசுகள் 124ஏ பிரிவை பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு தனது அமைச்சகத்தின் மூலம் ஏன் உத்தரவிடக் கூடாது?

தேசத் துரோக சட்டப் பிரிவுக்கு அதிகாரம் குறைக்கப்பட்டிருந்தாலும், உள்ளூா் போலீஸாா் களத்தில் அந்தப் பிரிவை தீவிரமாக பயன்படுத்தி வருகிறாா்கள். மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்காமல் தேசத் துரோக வழக்குப் பதிவை நிறுத்த முடியாது’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலா் மிருத்யுஞ்சயகுமாா் நாராயண் திங்கள்கிழமை தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில், ‘ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தின் காலாவதியான 1,500-க்கும் மேற்பட்ட சட்டங்கள் பிரதமா் மோடியின் வழிகாட்டுதலின் பேரில் ரத்து செய்யப்பட்டன. ஆங்கிலேயா்களின் காலனித்துவ சட்டங்களையும் நடைமுறைகளையும் ஒழிக்க வேண்டும் என்றும் பிரதமா் கேட்டுக்கொண்டுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com