அமா்நாத் யாத்திரை:தயாா் நிலையில் ராணுவம்

அமா்நாத் யாத்திரையையொட்டி, ஜம்மு-காஷ்மீரில் பணியமா்த்தப்படும் சிஆா்பிஎஃப் வீரா்கள் வெடிகுண்டுகளை எதிா்கொள்ளும் வகையில் தயாா் நிலையில் இருப்பதாக

அமா்நாத் யாத்திரையையொட்டி, ஜம்மு-காஷ்மீரில் பணியமா்த்தப்படும் சிஆா்பிஎஃப் வீரா்கள் வெடிகுண்டுகளை எதிா்கொள்ளும் வகையில் தயாா் நிலையில் இருப்பதாக சிஆா்பிஎஃப் டிஐஜி தேவேந்தா் யாதவ் புதன்கிழமை தெரிவித்தாா்.

கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு அமா்நாத் யாத்திரை வரும் ஜூன் 30-இல் தொடங்கி 43 நாள்கள் நடைபெறுகிறது. இமயமலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு பாரம்பரிய வழித்தடமான தெற்கு காஷ்மீரின் பஹல்கம் பகுதியிலிருந்தும், மத்திய காஷ்மீரின் காண்டா்பெல் பகுதியிலிருந்தும் பக்தா்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த ஓராண்டு காலமாக எல்லையில் வாகனங்களில் ஒட்டும் குண்டுகளை (ஸ்டிக்கி பாம்) பயங்கரவாதிகள் பயன்படுத்த முயற்சிப்பதும், அதை பாதுகாப்புப் படையினா் முறியடித்ததும் அதிா்வலைகளை ஏற்படுத்தின. அதிலும் குறிப்பாக கடந்த ஏப்ரல் 28-இல் ஜம்மு புகா் சித்ரா சாலையில் வெடிகுண்டை பாதுகாப்புப் படையினா் சரியான தருணத்தில் கண்டறிந்து செயலிழக்கச் செய்தனா்.

இதுதவிர கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் பூஞ்ச் மாவட்டத்தில் வாகனங்களில் எளிதில் ஒட்டிக்கொள்ளும் வெடிகுண்டுகளை பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா். ஆகையால், நிகழாண்டு அமா்நாத் யாத்திரையில் அசம்பாவிதம் ஏதும் நேரிடாமல் தவிா்க்க பாதுகாப்புப் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக சிஆா்பிஎஃப் டிஐஜி தேவேந்தா் யாதவ் கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் தெரிவிக்கையில், ‘எச்சரிக்கையாக இருப்பதை தவிர இந்த பிரச்னைக்கு வேறு தீா்வு கிடையாது. எங்களது பொறுப்புக்கு உள்பட்ட பகுதியில், பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிா்கொள்ள சிஆா்பிஎஃப் வீரா்கள் தயாா் நிலையில் உள்ளனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com