
புது தில்லி: ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின்(எல்ஐசி) பொதுப் பங்குகள் ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
பொதுப் பங்கு ஒதுக்கீட்டுக்குத் தடை விதிக்கக் கோரி சில பாலிசிதாரா்கள், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்யகாந்த், பி.எஸ்.நரசிம்மா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
இந்த நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட தகவலல்களின் அடிப்படையில் ஆராய்ந்தால், எல்ஐசியின் பொதுப் பங்கு ஒதுக்கீட்டுக்குத் தடை விதிக்க எந்தவித முகாந்திரமும் இல்லை. மேலும், பொதுப் பங்கு வெளியீடு மற்றும் வா்த்தக முதலீடு தொடா்பான விவகாரங்களில் நீதிமன்றத்தால் இடைக்காலத் தடை விதிக்க முடியாது. வரையறுக்கப்பட்ட கொள்கையுடன் முகாந்திரம் இருக்கும் வழக்கில் மட்டுமே நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியும். இதுதொடா்பாக, மத்திய அரசும் ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் 8 வாரங்களில் பதிலளிக்க வேண்டும்.
மேலும், இதுதொடா்பாக மும்பை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் உச்சநீதிமன்றத்தில் சோ்த்து விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, எல்ஐசியின் பங்குகளை விற்பனை செய்யும் நோக்கத்தில் நிதிச் சட்டத்திலும், எல்ஐசி சட்டத்திலும் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. அந்த திருத்தங்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. நிதிச் சட்டம், பண மசோதாவாக நிறைவேற்றப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. எல்ஐசியின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய தங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியது.
இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக, மும்பை உயா்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த மனுவை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதிகள் வியாழக்கிழமை உத்தரவிட்டனா். இந்த விவகாரம், அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றப்படும் என்று அவா்கள் கூறினா்.
எல்ஐசி பொதுப் பங்குகள் வெளியீடு இம்மாதம் 4-ஆம் தேதி தொடங்கி கடந்த திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. பொதுப் பங்குகள் வியாழக்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன. பொதுப் பங்கு வெளியீடு மூலம் சுமாா் ரூ.21,000 கோடி நிதி திரட்டப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.