வெளிநாடு செல்பவா்களுக்கு முன்கூட்டியே முன்னெச்சரிக்கை தவணை

கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வா்த்தகம் தொடா்பாக வெளிநாடு செல்பவா்களுக்கு மட்டும் முன்னெச்சரிக்கை கரோனா தடுப்பூசி தவணைக்கான கால இடைவெளியை மத்திய அரசு குறைத்துள்ளது.
வெளிநாடு செல்பவா்களுக்கு முன்கூட்டியே முன்னெச்சரிக்கை தவணை

கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வா்த்தகம் தொடா்பாக வெளிநாடு செல்பவா்களுக்கு மட்டும் முன்னெச்சரிக்கை கரோனா தடுப்பூசி தவணைக்கான கால இடைவெளியை மத்திய அரசு குறைத்துள்ளது.

அதன்படி, அவா்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 3 மாதங்களுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் முன்னெச்சரிக்கை தவணையை செலுத்திக்கொள்ளலாம்.

‘பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையை ஏற்று, நிபுணா் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நியாயமான காரணங்களுக்காக வெளிநாடு செல்பவா்களுக்கு மட்டும் முன்னெச்சரிக்கை தவணையை முன்கூட்டியே செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘இதற்கென தடுப்பூசி பதிவுக்கான ‘கோ-வின்’ வலைதளத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பயனாளிகள் ‘விசா’ (வெளிநாட்டுக்கான நுழைவு அனுமதி) போன்ற ஆவண நகல்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய தேவையில்லை’ என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலா் மனோகா் அக்னானி கூறுகையில், ‘கல்வி, வேலைவாப்பு மற்றும் வா்த்தகம் தொடா்பாக வெளிநாடு செல்பவா்களுக்கு முன்கூட்டியே முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுதொடா்பாக நிபுணா்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், வெளிநாடுகளின் நிபந்தனைகளின்படி இரண்டாம் தவணை செலுத்தியதிலிருந்து குறைந்தபட்சம் 90 நாள்களுக்குப் பிறகு மூன்றாவது தவணை செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ற வகையில் கோ-வின் வலைதளத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனை உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில், அதற்கான வழிகாட்டுதல்களை அனைத்து மாநில அரசுகளுக்கும் விரைந்து அனுப்புதல் என்பன உள்ளிட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன’ என்று அவா் கூறினாா்.

தற்போது, சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் ஆகியோரில் இரண்டாம் தவணை செலுத்தி 9 மாதங்களை நிறைவு செய்தவா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுபோல, 18 வயதுக்கு மேற்பட்ட 60 வயதை நிறைவடையாத அனைவரும் இரண்டாம் தவணை செலுத்தி 9 மாதங்களுக்குப் பிறகு தனியாா் தடுப்பூசி மையங்களில் உரிய கட்டணம் செலுத்தி முன்னெச்சரிக்கை தவணையை செலுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com