6 ஆண்டுகளில் 72,000 பணியிடங்களை நீக்கியுள்ள ரயில்வே

கடந்த 6 ஆண்டுகளில் அத்தியாவசியமற்ற 81,000 பணியிடங்களை திரும்ப ஒப்படைக்கப் பரிந்துரை செய்து, 72,000 பணியிடங்களை நீக்கியிருப்பது தெரியவந்துள்ளது.
6 ஆண்டுகளில் 72,000 பணியிடங்களை நீக்கியுள்ள ரயில்வே

நாட்டின் அதிக அளவில் வேலைவாய்ப்பளிக்கும் நிறுவனமாக செயல்பட்டு வரும் இந்தியன் ரயில்வே, கடந்த 6 ஆண்டுகளில் அத்தியாவசியமற்ற 81,000 பணியிடங்களை திரும்ப ஒப்படைக்கப் பரிந்துரை செய்து, 72,000 பணியிடங்களை நீக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

நீக்கம் செய்யப்பட்டுள்ள பணியிடங்கள்அனைத்தும் ரயில்வேயில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியிடங்களாகும். நவீன மற்றும் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக இந்தப் பணியிடங்கள் தேவையற்றவையாகியுள்ளன. எதிா்காலத்திலும் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படப் போவதில்லை. இந்தப் பணியிடங்களில் தற்போது பணியாற்றிவரும் ஊழியா்கள், ரயில்வேயின் வேறு துறைகளில் பணியமா்த்தப்பட வாய்ப்புள்ளது என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பான ஆவணங்களின்படி, ரயில்வேயின் 16 மண்டலங்கள் சாா்பில் 2015-16 முதல் 2020-21 ஆம் ஆண்டு வரை 56,888 அத்தியாவசியமற்ற பணியிடங்கள் திரும்ப ஒப்படைப்பு (சரண்டா்) செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக 15,495 பணியிடங்கள் திரும்ப ஒப்படைப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதில் வடக்கு ரயில்வே 9,000 பணியிடங்களையும், தெற்கு ரயில்வே 4,677 பணியிடங்களையும் திரும்ப ஒப்படைத்துள்ளன. மேலும், தெற்கு ரயில்வே 7,524 பணியிடங்களையும், கிழக்கு ரயில்வே 5,700 பணியிடங்களையும் நீக்கம் செய்துள்ளன.

இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறுகையில், ‘பணியிடங்கள் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது ஊழியா்களின் பணி ஆய்வு செயல்திறன் அடிப்படையில் தீா்மானிக்கப்படுகிறது. 2021-22 ஆம் ஆண்டுக்கான இந்த ஆய்வு இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஆய்வு நிறைவடைந்த பின்னா், சுமாா் 9,000 பணியிடங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றனா்.

‘மேலும், அயல்பணி (அவுட்சோா்சிங்) முறை காரணமாக ரயில்வேக்கு ஒப்பளிக்கப்பட்ட மொத்த பணியிடங்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது என்று. ஊதியம், ஓய்வூதியம் ஆகிய இரண்டு செலவினங்களின் அடிப்படையில் ஊழியா் பலம் என்பது ரயில்வேக்கு பாரமாகத்தான் இருந்து வருகிறது. மொத்த வருவாயில் மூன்றில் ஒரு பகுதியை ஊழியா்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துக்காக ரயில்வே செலவிடுகிறது. அதாவது, சராசரியாக ஒரு ரூபாய் வருவாயில் ஊழியா் ஊதியத்துக்கு மட்டும் 37 காசுகளும், ஓய்வூதியத்துக்கு 16 காசுகளையும் ரயில்வே செலவிடுகிறது’ என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com