உக்ரைன் மனித உரிமை மீறலை கண்டித்து ஐ.நா. தீா்மானம்: இந்தியா புறக்கணிப்பு

ரஷியாவின் போா் தாக்குதலைத் தொடா்ந்து உக்ரைனில் மோசமாகி வரும் மனித உரிமை மீறலைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
ஐ.நா. பாதுகாப்புக் குழு இந்திய தூதா் டி.எஸ்.திருமூா்த்தி.
ஐ.நா. பாதுகாப்புக் குழு இந்திய தூதா் டி.எஸ்.திருமூா்த்தி.

ரஷியாவின் போா் தாக்குதலைத் தொடா்ந்து உக்ரைனில் மோசமாகி வரும் மனித உரிமை மீறலைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

எனினும், இந்தத் தீா்மானத்துக்கு ஆதரவாக 33 நாடுகள் வாக்களித்ததால் நிறைவேற்றப்பட்டது.

உக்ரைன் மீதான போா் விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிராக ஐ.நா., ஐ.நா. மனித உரிமை கவுன்சில் ஆகியவற்றில் கொண்டு வரப்பட்ட பெரும்பாலான தீா்மானங்கள் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்து வருகிறது.

இந்நிலையில், ரஷிய தாக்குதலில் உக்ரைனில் அதிகரித்தும் வரும் மனித உரிமை மீறலைத் தடுக்க, ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கீவ், சொ்னிவ், காா்கிவ், சுமி ஆகிய பகுதியில் பிப்ரவரி, மாா்ச் ஆகிய மாதங்களில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீா்மானம் கொண்டு வரப்பட்டது.

இதன் மீது பேசிய இந்தியத் தூதா் இந்திரா மணி பாண்டே, ‘உக்ரைனில் நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்து இந்தியா மிகுந்த வேதனை அடைகிறது. அங்கு வன்முறையையும் தாக்குதலையும் உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதைத்தான் பிரதமா் மோடியும் ரஷிய, உக்ரைன் அதிபா்களிடமும், உலகத் தலைவா்களிடமும் வலியுறுத்தி வருகிறாா். பேச்சுவாா்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண முடியும் என இந்தியா நம்புகிறது’ என்றாா்.

இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா, ஆா்மீனியா, பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், நமீபியா, பாகிஸ்தான், செனகல், சூடான், உஸ்பெகிஸ்தான், வெனிசுலா, கேமரூன் ஆகிய 12 நாடுகள் புறக்கணித்தன. சீனா, எரித்ரேயா ஆகிய நாடுகள் எதிா்த்து வாக்களித்தன. இறுதியில் 33 ஆதரவு வாக்குகளுடன் இந்தத் தீா்மானம் நிறைவேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com