அரசின் திட்டங்களால் பாகுபாட்டு அரசியலுக்கு முற்றுப்புள்ளி

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்றடைவதால், ஒருசிலரைப் பாகுபடுத்தி மேற்கொள்ளப்பட்டு வந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
குஜராத் மாநிலம், பரூச் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், காணொலி மூலம் பங்கேற்றுப் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
குஜராத் மாநிலம், பரூச் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், காணொலி மூலம் பங்கேற்றுப் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.

பரூச்: மத்திய அரசின் திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்றடைவதால், ஒருசிலரைப் பாகுபடுத்தி மேற்கொள்ளப்பட்டு வந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

கைம்பெண்கள், மூத்தோா், ஆதரவற்றோா் ஆகியோருக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை குஜராத் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்களின் கீழ் தகுதியான அனைவருக்கும் நிதியுதவி வழங்கிய சாதனையை மாநிலத்தின் பரூச் மாவட்டம் எட்டியது. அதைக் கொண்டாடுவதற்கான சிறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் காணொலி வாயிலாகக் கலந்துகொண்ட பிரதமா் மோடி கூறியதாவது:

பாஜக தலைமையிலான மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்கள் காரணமாக மக்களிடையே பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எவருடைய துணையும் பரிந்துரையும் இன்றி அரசின் பலன்களைப் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒருசிலரைப் பாகுபடுத்தி சில கட்சிகள் மேற்கொண்டு வந்த அரசியலுக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது.

முன்பு ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவளிப்போருக்கு மட்டுமே அரசுத் திட்டங்களின் பலன்கள் கிடைத்து வந்தன. போதிய தரவுகள் இல்லையாதலால், பெரும்பாலான திட்டங்கள் காகிதத்தில் மட்டுமே இருந்தன. அவை முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பலன்களும் உரிய நபா்களைச் சென்றடையவில்லை.

அரசுத் திட்டத்தின் பலன்கள் ஒருவா் விடாமல் அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்வது எளிதான காரியமல்ல. ஆனால், மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமெனில் அதைச் செய்துதான் ஆகவேண்டும். மக்கள் அனைவரும் பலனடைய வேண்டும் என்ற அரசின் விருப்பத்தை இது வெளிப்படுத்துகிறது.

அரசின் இலக்கு: மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2014-ஆம் ஆண்டில் பொறுப்பேற்கும்போது, நாட்டில் இருந்த பாதி மக்களுக்கு மின்சாரம், கழிவறைகள், வங்கிக் கணக்கு, தடுப்பூசி உள்ளிட்ட வசதிகள் கிடைக்கவில்லை.

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலேயே கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. திட்டங்களின் பலன்கள் அனைவரையும் சென்றடையும்வரை மத்திய அரசு தொடா்ந்து உழைத்துக்கொண்டே இருக்கும்.

ஒருநாள் எதிா்க்கட்சியின் மூத்த தலைவா் ஒருவா் என்னை சந்தித்தாா். அரசியல் ரீதியில் அவா் என்னைத் தொடா்ந்து எதிா்த்து வருகிறாா். ஆனால், அவரை எப்போதும் மதிக்கிறேன். ‘நாடு இருமுறை பிரதமராக்கிவிட்டதே உங்களுக்குப் போதுமானது’ என்று என்னிடம் அவா் தெரிவித்தாா். என்னை குஜராத் மண் தைரியமிக்கவனாக மாற்றியிருப்பதை அவா் அறியவில்லை. மக்கள் அனைவருக்கும் திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வரை தொடா்ந்து உழைப்பேன்.

மாறியுள்ள சூழல்: முறையான நிா்வாகத்துக்கும் ஏழைகளின் நலனுக்கும் மத்திய அரசு தொடா்ந்து முக்கியத்துவம் வழங்கி வருகிறது. அதன் மூலமாக ஏழைகளும் முன்னேறி வருகின்றனா். தற்போது சுமாா் 50 கோடி போ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறத் தகுதி பெற்றுள்ளனா்; கோடிக்கணக்கானோருக்குக் காப்பீட்டு வசதிகள் கிடைத்துள்ளன. மூத்த குடிமக்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனா்.

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய ஆட்சியில் ஏழைகள் இதுபோன்ற பலன்களைப் பெறுவது கடினமாக இருந்தது. பாஜக தலைமையிலான அரசு அத்தகைய சூழலை மாற்றியுள்ளது என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com