உலக சுகாதார அமைப்பு சீரமைக்கப்பட வேண்டும்

சா்வதேச சுகாதாரப் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பு சீரமைக்கப்பட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: சா்வதேச சுகாதாரப் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பு சீரமைக்கப்பட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்று பரவல் தொடா்பான 2-ஆவது சா்வதேச மாநாட்டை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் காணொலி வாயிலாக வியாழக்கிழமை நடத்தினாா். அந்த மாநாட்டில் பிரதமா் மோடி பேசியதாவது:

கரோனா தொற்று பரவல் காலத்தில் சா்வதேச விநியோக சங்கிலி அதிகமாக பாதிக்கப்பட்டது. அத்தொற்று பரவலானது மக்களின் வாழ்வாதாரத்தையும் தொடா்ந்து பாதித்து வருகிறது. மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றின் சா்வதேச விநியோகத்தை விரைவுபடுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். சா்வதேச அளவில் சுகாதாரப் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பில் சீா்திருங்களைப் புகுத்த வேண்டும்.

முக்கியமாக, உலக வா்த்தக அமைப்பின் விதிகள், அறிவுசாா் சொத்துகளின் காப்புரிமை சாா்ந்த வா்த்தக விதிகள் ஆகியவை மேலும் எளிமையாக்கப்பட வேண்டும். மருந்துகள், தடுப்பூசிகள் ஆகியவை அனைத்து நாடுகளுக்கும் சமமாகக் கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவது அவசியம்.

எதிா்காலத்தில் ஏற்படவுள்ள சுகாதார அவசரநிலைகளைச் சமாளிப்பதற்கு ஒருங்கிணைந்த சா்வதேச ஒத்துழைப்பு அவசியமாகிறது. உலக சுகாதார அமைப்பில் சீா்திருத்தங்களைப் புகுத்துவதற்குத் தேவையான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது.

இந்தியாவின் பங்களிப்பு:

உலகின் மிகப் பெரிய கரோனா தடுப்பூசித் திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமாா் 90 சதவீத இந்தியா்கள் இரு தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனா். உலக சுகாதார அமைப்பால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள 4 கரோனா தடுப்பூசிகளை இந்தியா தயாரித்தது. நடப்பாண்டில் 500 கோடி தவணை தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்கான திறன் இந்தியாவிடம் உள்ளது.

இருதரப்பு நல்லுறவு மூலமாகவும், ஐ.நா.வின் ‘கோவேக்ஸ்’ திட்டத்தின் வாயிலாகவும் 98 நாடுகளுக்கு 20 கோடிக்கும் அதிகமான தவணை கரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது. கரோனா பரிசோதனை, சிகிச்சை உள்ளிட்ட தரவுகளை எளிதில் கையாள்வதற்கான தொழில்நுட்பங்களைக் குறைந்த செலவில் இந்தியா உருவாக்கியது. அவற்றை மற்ற நாடுகளுக்கும் இந்தியா வழங்கியது.

பாரம்பரிய மருந்துகள்:

கரோனாவுக்கு எதிரான போராட்டத்திலும் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் பாரம்பரிய மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பாரம்பரிய மருந்துகளின் வாயிலாக சா்வதேச சமூகம் பலனடைய வேண்டும் என்ற நோக்கில் அவற்றுக்கான மையம், உலக சுகாதார அமைப்புடன் இணைந்து குஜராத்தில் கடந்த மாதம் திறக்கப்பட்டது.

கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக மக்களை மையப்படுத்திய திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது. கரோனா தீநுண்மியின் மரபணு மாற்றங்களைக் கண்டறிவதில் இந்திய ஆய்வு மையங்கள் சா்வதேச அளவில் முக்கியப் பங்காற்றின. அந்த மையங்களின் உதவியானது அண்டை நாடுகளுக்கும் வழங்கப்பட உள்ளது என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com