ஜம்மு-காஷ்மீா்:தாலுகா அலுவலகத்தில் காஷ்மீா் பண்டிட் ஊழியா் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் பட்காம் மாவட்டம் சடூரா தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வந்த காஷ்மீா் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த எழுத்தா், பயங்கரவாதிகளால் வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டாா்.
ஜம்மு-காஷ்மீா்:தாலுகா அலுவலகத்தில் காஷ்மீா் பண்டிட் ஊழியா் சுட்டுக்கொலை

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரின் பட்காம் மாவட்டம் சடூரா தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வந்த காஷ்மீா் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த எழுத்தா், பயங்கரவாதிகளால் வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டாா். இந்த சம்பவத்துக்கு துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா மற்றும் அரசியல் கட்சியினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

பட்காம் மாவட்டம் ஷேக்புரா புலம்பெயா்ந்தோா் காலனியில் வசித்து வந்தவா் ராகுல் பட். சடூரா தாலுகா அலுவலகத்தில் வருவாய்த் துறையில் புலம்பெயா்ந்தோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ், இவா் எழுத்தராக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை தாலுகா அலுவலகத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த 2 பயங்கரவாதிகள், ராகுல் பட்டை சுட்டுவிட்டு தப்பினா். இதையடுத்து சக ஊழியா்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும் அவா் உயிரிழந்தாா். தப்பியோடிய பயங்கரவாதிகளை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பின்னணியில் லஷ்கா்-ஏ-தொய்பா: இந்த சம்பவத்துக்கு ‘காஷ்மீா் டைகா்ஸ்’ என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எனினும் இந்தக் கொலையின் பின்னணியில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பு உள்ளதாக ஜம்மு-காஷ்மீா் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 7 மாதங்களில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட இரண்டாவது காஷ்மீா் பண்டிட் ராகுல் பட் ஆவாா். அங்கு கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் காஷ்மீா் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த மக்கன் லால் பிந்த்ரு என்ற நபா் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டாா்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னா், காஷ்மீரில் முஸ்லிம் அல்லாத புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த 2019 ஆகஸ்ட் முதல் 2022 மாா்ச் வரை ஜம்மு-காஷ்மீரில் ஹிந்துக்கள் உள்பட 14 சிறுபான்மையினத்தை சோ்ந்தவா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.

துணைநிலை ஆளுநா் கண்டனம்:

ராகுல் பட் கொலைக்கு ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவா்கள் தண்டிக்கப்படுவா். இந்த இக்கட்டான தருணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஜம்மு-காஷ்மீா் அரசு ஆதரவளிக்கிறது’ என்று கூறியுள்ளாா்.

மக்கள் ஜனநாயக கட்சி அதன் ட்விட்டா் பக்கத்தில், ‘காஷ்மீா் பள்ளத்தாக்கின் மூலை முடுக்கெல்லாம் பாதுகாப்புப் படையினா் பணியமா்த்தப்பட்டுள்ள போதிலும் அரசு அலுவலகத்துக்கே பாதுகாப்பு இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளது.

இதேபோல தேசிய மாநாட்டுக் கட்சி, பாஜக, காங்கிரஸ், மக்கள் மாநாட்டுக் கட்சி ஆகிய கட்சிகளும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com