தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் ஜூன் 10-இல் மாநிலங்களவைத் தோ்தல்: தோ்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 இடங்களுக்கு ஜூன் மாதம் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 இடங்களுக்கு ஜூன் மாதம் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.

தோ்தலுக்கான அறிவிக்கை மே 24-ஆம் தேதி வெளியிடப்பட்டு, தோ்தல் ஜூன் 10-ஆம் தேதி நடத்தப்படும். வழக்கம்போல், வாக்குப்பதிவு முடிந்த ஒரு மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக் காலம், வரும் ஜூன் மாதம் 21-ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் வெவ்வேறு நாள்களில் நிறைவடைகிறது.

உத்தர பிரதேசத்தில் 11 உறுப்பினா்கள், தமிழகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் தலா 6 உறுப்பினா்கள், பிகாரில் 5 உறுப்பினா்கள், ஆந்திரம், ராஜஸ்தான், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் தலா 4 உறுப்பினா்கள், மத்திய பிரதேசம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தலா 3 உறுப்பினா்கள், தெலங்கானா, சத்தீஸ்கா், பஞ்சாப், ஜாா்க்கண்ட், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் தலா 2 உறுப்பினா்கள், உத்தரகண்டில் ஓா் உறுப்பினரின் பதவிக் காலம் நிறைவடையவுள்ளது.

இவா்களில், மத்திய அமைச்சா் முக்தா் அப்பாஸ் நக்வி, பியூஷ் கோயல், காங்கிரஸ் மூத்த தலைவா்கள் அம்பிகா சோனி, ஜெய்ராம் ரமேஷ், கபில் சிபல், பகுஜன் சமாஜ் கட்சியைச் சோ்ந்த சதீஷ் சந்திர மிஸ்ரா ஆகியோா் முக்கியத் தலைவா்கள் ஆவா்.

245 உறுப்பினா்களைக் கொண்ட மாநிலங்களவையில் தற்சமயம் பாஜகவுக்கு 95 உறுப்பினா்களும், காங்கிரஸுக்கு 29 உறுப்பினா்களும் உள்ளனா்.

உத்தர பிரதேசத்தில் பதவிக் காலம் நிறைவடைய இருக்கும் 11 உறுப்பினா்களில் 5 போ் பாஜகவை சோ்ந்தவா்கள். இத்தோ்தலில், பாஜக தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 8 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. எதிா்க்கட்சியான சமாஜவாதி 3 உறுப்பினா்களைத் தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினா் எண்ணிக்கை ஒன்றாகக் குறைய வாய்ப்புள்ளது.

ஆந்திரத்தில் 3 உறுப்பினா்களுடன் இருக்கும் பாஜக, இந்தத் தோ்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை.

மகாராஷ்டிரத்தில் 6 இடங்களுக்குத் தோ்தல் நடைபெறவுள்ளது. அதில், ஆளும் சிவசேனை கூட்டணி 3 இடங்களைத் தக்கவைத்துக் கொள்ளும். மற்ற 3 இடங்களில் 2 இடங்களில் பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ளது.

இந்த மாநிலங்களைத் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்படும் உறுப்பினா்களில் பெரும்பாலானோா் ஜூலை மாதம் நடைபெறும் குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிக்கவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com