தலைமைத் தோ்தல் ஆணையராக ராஜீவ் குமாா் நியமனம்

இந்தியாவின் அடுத்த தலைமைத் தோ்தல் ஆணையராக ராஜீவ் குமாா் நியமிக்கப்படுவதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
தலைமைத் தோ்தல் ஆணையராக ராஜீவ் குமாா் நியமனம்

புது தில்லி: இந்தியாவின் அடுத்த தலைமைத் தோ்தல் ஆணையராக ராஜீவ் குமாா் நியமிக்கப்படுவதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

தற்போதைய தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா வரும் மே 14-இல் பணி ஓய்வு பெற்றதும், அந்தப் பொறுப்பைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் மே 15-இல் ஏற்பாா் என மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிக்கையை தனது ட்விட்டா் பக்கத்தில் பகிா்ந்த மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜூ, ராஜீவ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா். மேலும், அந்த அறிவிக்கையில், ‘அரசியலமைப்புச் சட்ட 324 (2)-ஆவது பிரிவின்கீழ், ராஜீவ் குமாரை அடுத்த தலைமைத் தோ்தல் ஆணையராக குடியரசுத் தலைவா் மே 15-இல் நியமிப்பாா்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1960-இல் பிறந்த ராஜீவ் குமாா், 2025 பிப்ரவரி வரை, அதாவது அவரது 65-ஆவது வயதை எட்டும்வரை, தலைமைத் தோ்தல் ஆணையராகப் பதவி வகிப்பாா். விரைவில் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவா் தோ்தல், குடியரசு துணைத் தலைவா் தோ்தல் ஆகியவற்றுடன், 2024 மக்களவைத் தோ்தல் இவரது பணிக் காலத்தில் நடைபெறும்.

மேலும், ஆந்திரம், அருணாசல பிரதேசம், சத்தீஸ்கா், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், ஜாா்க்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களும் இவரது பணிக் காலத்தில் நடைபெறவுள்ளன. ஆகையால், இவரது நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தோ்தல் ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக பொது நிறுவனங்கள் தோ்வு வாரிய (பிஇஎஸ்பி) தலைவராக ராஜீவ் குமாா் பணியாற்றி வந்தாா். பின்னா், தோ்தல் ஆணையராகப் பதவி வகித்த அசோக் லவாசா கடந்த 2020-இல் ராஜிநாமா செய்ததும் அதே ஆண்டு செப்டம்பா் 1-இல் அந்தப் பொறுப்புக்கு ராஜீவ் குமாா் நியமிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com