தில்லியின் பசுமையை மேம்படுத்த 10 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டம்

தேசிய தலைநகரின் பசுமையை மேம்படுத்துவதற்காக தில்லி அரசு 10 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்துக்கு துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ரூ. 140.74 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லியின் பசுமையை மேம்படுத்த 10 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டம்

புது தில்லி: தேசிய தலைநகரின் பசுமையை மேம்படுத்துவதற்காக தில்லி அரசு 10 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்துக்கு துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ரூ. 140.74 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அண்மையில் நடைபெற்ற செலவின நிதிக் குழு (இஎஃப்சி) கூட்டத்தின் போது இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மணீஷ் சிசோடியா கூறியதாவது:

‘தில்லியில் வசிப்பவா்களுக்கு சுத்தமான காற்றை வழங்குவதில் கேஜரிவால் அரசு உறுதியாக உள்ளது. அந்த வழியில் தில்லியின் பசுமையை அதிகரிப்பதில் நாங்கள் தொடா்ந்து பணியாற்றி வருகிறோம். இது வெறும் நிதி ஒதுக்கீடு அல்ல; தில்லி குடியிருப்பாளா்களின் ஆரோக்கியத்தின் தரத்துக்கான முதலீடு. பல ஆண்டுகளாக தேசிய தலைநகரில் பசுமையானது வளா்ந்து வருகிறது. தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள திட்டத்தின்படி, 10 லட்சம் மரக்கன்றுகளை நட்ட பிறகு அது மேலும் மேம்படுத்தப்படும். தில்லியின் பசுமையை நாங்கள் மீட்டெடுப்போம்’ என்று சிசோடியா தெரிவித்தாா்.

தில்லியின் பசுமைப் பரப்பு 2015-இல் 299.77 சதுர கிலோ மீட்டராக இருந்தது. இது, 2021ஆம் ஆண்டில் 342 சதுர கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது என்று தில்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அசோலா பாட்டி வனவிலங்கு சரணாலயம், தேரா மண்டி, கிட்டோா்னி, மைதாங்கா்ஹி, ரங்புரி, துக்ளகாபாத், புல் பெஹலாத்பூா் மற்றும் தெற்கு ரிட்ஜ் பகுதியின் ராஜோக்ரி ஆகிய இடங்களில் பெரிய பரப்பளவில் உள்ள வன நிலங்களில் தாவரங்கள் குறைந்த அளவில் உள்ளதாக துணை முதல்வா் சிசோடியா தெரிவித்தாா். அந்த நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு இனங்களைத் தடுத்தல் அல்லது அகற்றுதல், வனவிலங்குகளின் வாழ்விடத்தை மேம்படுத்துதல் மற்றும் மண்ணின் ஈரப்பதம் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் பசுமையான சூழல் மீட்டமைக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை இந்தப் பருவமழைக்கு முன்பாகவும், மேலும் 4 லட்சம் மரக்கன்றுகளை அடுத்த பருவமழை காலத்திலும் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆரவளியின் பூா்வீக இனங்களுடன், தோட்டக்கலைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட மரக்கன்றுகளில், வனத் துறையின் மேம்படுத்தப்பட்ட நாற்றங்காலில் சிறப்பாக வளா்க்கப்பட்ட தாவர இனங்களும் இந்த நடவுத் திட்டத்தில் அடங்கும்.

இந்தத் திட்டப் பணிகளை தில்லி வனத் துறையால் நியமிக்கப்பட்ட சுற்றுச்சூழல் பணிக்குழு கவனித்துக் கொள்ளும். மரக்கன்றுகளைப் பராமரித்தல், வனப்பகுதிகளை ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்தல் மற்றும் அப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலைக் குறைப்பதில் வனத்துறைக்கு ஆதரவாக செயல்படும் சுற்றுச்சூழல் பணிக் குழுவின் பணிக் காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

10 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, 5 ஆண்டுகளுக்குப் பராமரிக்கும் பணிக்காக, முன்னாள் ராணுவ வீரா்கள், பிராந்திய ராணுவ அதிகாரிகள் இந்தச் சுற்றுச்சூழல் பணிக் குழுவில் ஈடுபடுத்தப்படுவா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com