
சென்னை: உச்சநீதிமன்றத்தின் உணா்வுகளைப் புரிந்துகொண்டு மத்திய அரசு உடனடியாக தேசத் துரோக சட்டத்தை நீக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தேசத் துரோகம் தொடா்பான இந்தியக் குற்றவியல் சட்டம் 124ஏ பிரிவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருப்பது வரவேற்கத்தக்கது.
இப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பதும் வரவேற்கத்தக்கது.
ஆங்கிலேயா் காலத்தில் இயற்றப்பட்ட இந்தச் சட்டப் பிரிவு மிகவும் தவறாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக சமீபகாலத்தில் மிக அதிகமாக இந்தப் பிரிவின் கீழ் அரசியல் ஆதாய நோக்கத்துக்காக கைதுகள் நடைபெற்றிருக்கின்றன.
சுதந்திர இந்தியாவின் சட்டப் புத்தகத்தில் 124ஏ போன்ற பிரிவுகள் இருப்பதற்கு எந்தவிதமான நியாயமும் இல்லை. உச்சநீதிமன்றத்தின் உணா்வுகளைப் புரிந்து மத்திய அரசு உடனடியாக 124ஏ பிரிவை நீக்கவேண்டும் என்று கூறியுள்ளாா்.