வெடிபொருள்களை பயங்கரவாதிகள் சொன்ன இடத்தில் கொடுத்தால் ரூ.50 லட்சம்?

ஹரியாணா மாநிலம் கர்னால் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் கைதான 4 பருக்கு கடந்த ஒரு சில மாதங்களில் ஹவாலா உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ரூ.50 லட்சம் வரை வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வெடிபொருள், துப்பாக்கிகளை பயங்கரவாதிகள் சொன்ன இடத்தில் கொடுத்தால் ரூ.50 லட்சம்
வெடிபொருள், துப்பாக்கிகளை பயங்கரவாதிகள் சொன்ன இடத்தில் கொடுத்தால் ரூ.50 லட்சம்

கர்னால்: ஹரியாணா மாநிலம் கர்னால் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் கைதான 4 பருக்கு கடந்த ஒரு சில மாதங்களில் ஹவாலா உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ரூ.50 லட்சம் வரை வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பயங்கர வெடிபொருள்களுடன் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நான்கு பேர் ஹரியாணா மாநிலம் கர்னால் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி ஹர்வீந்தர் சிங், ஹவாலா மூலம் ரூ.8.5 லட்சத்தையும் இதர வழிகளில் ரூ.27.5 லட்சத்தையும் இந்த நான்கு பேருக்கும் அனுப்பியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 14 பாக்கெட் ஹெராயின் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு பாக்கெட்டை ஒரு லட்சத்துக்கு விற்க வேண்டும் என்பது பணி.

பஞ்சாப் மாநிலத்தில், வேறொரு நபரிடமிருந்து இவர்கள் பணம் பெறும் இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த நபரின் அடையாளத்தை அறியும் பணி நடந்த வருகிறது.

பெரோஸாபாத் மற்றும் லூதியாணாவைச் சேர்ந்த நான்கு பேர், பாகிஸ்தானில் இயங்கும் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்வீந்தர் சிங் என்கிற ரிண்டாவின் அறிவுறுத்தலின்படி, தெலங்கானாவுக்கு வெடிபொருள்களைக் கடத்தியபோது பிடிபட்டனர்.

கர்னால் மாவட்டத்தில், இவர்கள் வந்த காரை ரோபோ உதவியுடன் சோதனை செய்ததில், கைத்துப்பாக்கிகள், 30 கேட்ரிஜ்கள், 3 பெட்டிகளில் தலா 2.5 கிலோ எடைகொண்ட வெடிபொருள்கள் மற்றும் ரூ.1.3 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை எஸ்யுவி வகை காரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அம்பாலா - தில்லி தேசிய நெடுஞ்சாலையில் கர்னால் மாவட்டத்தில் இன்று நடந்த வாகனச் சோதனையின்போது பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கர்னால் காவல்துறை கண்காணிப்பாளர் கங்கா ராம் புனியா மற்றும் ஹரியாணா காவல்துறை இணைந்து மே 4ஆம் தேதி காலை 5 மணிக்கு சுங்கச் சாவடி அருகே துரிதமாக செயல்பட்டு இந்த வாகனத்தை பிடித்தனர்.

இந்த வாகனத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்களை தடயவியல் துறையினர் ஆய்வு செய்ததில், 7.5 கிலோ எடை கொண்ட வெடிபொருள், இஸ்திரிப்பெட்டியில் வைத்து அதனுடன், ஏராளமான இரும்புத் துண்டுகள் அழுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வெடிபொருள் பெட்டியும் டைமர் கருவியுடன் இணைக்கப்பட்டிருந்தது. டெட்டனேட்டரும், டைமர் கருவியும் இந்த ஐஇடி வகை வெடிபொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றுக்கு இதுவரை பேட்டரி இணைக்கப்படவில்லை.

இந்த வெடிபொருள்கள் வந்தது எப்படி?
காவல்துறை அதிகாரி புனியா கூறுகையில், இந்த பயங்கரவாத கும்பலுக்கு  குர்ப்ரீத் தான் தலைவர். பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத கும்பலான காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்வீந்தர் சிங் என்கிற ரிண்டாவை தொடர்பு கொண்டு பேசி வருவார். ரிண்டா கூறியபடி, பெரோஸ்பூர் பகுதியில் இந்த வெடிபொருள்கள் பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் கொண்டு வந்து போடப்பட்டுள்ளது.

இந்த வெடிபொருள்கள், ரிண்டா கூறுவதுபோல அந்தந்த இடங்களில் கொண்டு சென்று சேர்க்கும் வேலையை இந்த கும்பல் செய்து வருகிறது. தற்போது தெலங்கானாவில் உள்ள அடிலாபாத்துக்கு இவற்றை சேர்க்கச் சென்ற போதுதான் காவல்துறை பிடியில் சிக்கியிருக்கிறார்கள்.

இவர்கள் ஏற்கனவே மகாராஷ்டிரம் உள்பட இரண்டு இடங்களுக்கு வெடிபொருள்களைக் கொண்டு சேர்த்துள்ளதையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

பாகிஸ்தானிலிருந்து வரும் வெடிபொருள்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் சொல்லும் இடத்தில் சேர்ப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை வழங்கப்படுவதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com