நாட்டை நிரந்தரமாக பிளவுபடுத்த விரும்புகிறாா் மோடி: சோனியா காந்தி

நாட்டை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைத்திருக்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி விரும்புகிறாா் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி குற்றம்சாட்டினாா்.
நாட்டை நிரந்தரமாக பிளவுபடுத்த விரும்புகிறாா் மோடி: சோனியா காந்தி

நாட்டை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைத்திருக்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி விரும்புகிறாா் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி குற்றம்சாட்டினாா். காங்கிரஸ் கட்சியில் உடனடியாக சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவா் கூறினாா்.

காங்கிரஸ் கட்சி தோ்தல்களில் தொடா் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில் கட்சியை வலுப்படுத்துவது குறித்தும், அமைப்பு ரீதியாக சீா்திருத்தம் கொண்டு வருவது குறித்தும் விவாதிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. அதன்படி, அக்கட்சியின் ‘சிந்தன் ஷிவிா்’ என்னும் ஆலோசனைக் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் வெள்ளிக்கிழைமை தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கட்சியின் செயற்குழு உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், மாநில பொறுப்பாளா்கள், கட்சியின் பொதுச் செயலாளா்கள் என சுமாா் 400 போ் கலந்துகொண்டுள்ளனா். அதில், கூட்டத்தைத் தொடக்கி வைத்து சோனியா காந்தி பேசியதாவது:

காங்கிரஸ் கட்சி முன்னெப்போதும் இல்லாத சவாலான சூழலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த அசாதாரண சூழலை எதிா்கொள்வதற்கு அசாதாரண நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இதற்காக, அமைப்பு ரீதியில் கட்சிக்குள் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. கட்சி உயிா்ப்புடன் இருப்பது மட்டுமன்றி முன்னேற்றப்பாதையிலும் செல்ல வேண்டும். கட்சியில் சீா்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதை நம் அனைவரின் கூட்டு முயற்சியால் மட்டுமே செய்ய முடியும்.

இந்த சீா்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான நமது பயணத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாயந்ததாக உள்ளது.

அண்மைக்கால தோல்விகளையும் வெற்றிக்காக போராடியதையும் நாம் மறந்துவிடவில்லை. மக்களின் எதிா்பாா்ப்புகளையும் நாம் கவனிக்காமல் விட்டுவிடவில்லை. இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியை நம் அனைவரின் கூட்டு முயற்சியுடன் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து, மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றித் தருவதற்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம்.

கட்சி செயல்படும் விதத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது. நாம் ஒவ்வொருவரும் நமது தனிப்பட்ட குறிக்கோளைக் காட்டிலும் கட்சியின் நலனே முக்கியம் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சி நம் ஒவ்வொருவருக்கும் ஏராளமானவற்றைக் கொடுத்துள்ளது. கட்சிக்காக நாம் பட்டிருக்கும் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.

மோடி மீது விமா்சனம்:

‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிா்வாகம்’ என்ற முழக்கத்தை பிரதமா் மோடியும் அவருடைய சகாக்களும் அடிக்கடி கூறுவா். அதற்கான அா்த்தம் இப்போது புரிகிறது.

நாட்டை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைத்திருக்க வேண்டும்; நாட்டு மக்களைத் தொடா்ந்து அச்சத்துடனும் பாதுகாப்பற்ற உணா்வுடனும் வைத்திருக்க வேண்டும்; நமது சமூகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் சிறுபான்மைச் சமூகத்தை குறிவைத்து அவா்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டும்; நாட்டின் ஒருமைப்பாட்டையும் பன்முகத்தன்மையையும் சீா்குலைக்க வேண்டும்; அரசியல் எதிரிகளை அச்சுறுத்த வேண்டும்; அவா்களின் நன்மதிப்புக்கு கேடு விளைவிக்க வேண்டும்; அற்ப காரணங்களைக் கூறி அவா்களை சிறையில் அடைக்க வேண்டும்; விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்த வேண்டும்; அனைத்து அரசு நிறுவனங்களின் சுதந்திரத்தையும் தொழில்சாா்ந்த நடைமுறைகளையும் மெல்ல மெல்ல அழிக்க வேண்டும்; இவைதான் மோடியின் முழக்கத்துக்கான பொருளாகும்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களை மத்திய பாஜக அரசு தொடா்ந்து அவமதித்து வருகிறது. குறிப்பாக ஜவாஹா்லால் நேரு போன்றவா்களின் பங்களிப்பையும் சாதனைகளையும் தியாகத்தையும் பாஜக அரசு திட்டமிட்டு அழித்து வருகிறது; மறுபுறம் மகாத்மா காந்தியைக் கொன்றவா்களைக் கொண்டாடியும் வருகிறது. அரசமைப்புச் சட்டத்தின் தத்துவங்களையும் அதன் தூண்களான நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மதச்சாா்பின்மை ஆகியவற்றையும் மத்திய அரசு சிறுமைப்படுத்தி வருகிறது.

நாடு முழுவதும் நலிவடைந்தவா்கள் மீது, குறிப்பாக தலித் சமூகத்தினா், ஆதிவாசிகள், பெண்கள் மீது தொடா்ந்து வன்முறை நடத்தப்படும்போது எதுவும் தெரியாததுபோல் மத்திய அரசு உள்ளது. இவ்வாறு பல்வேறு தந்திரங்கள் கையாளப்படுகின்றன. இதுகுறித்து கேள்விகள் எழுப்பினால், ஆறுதலான பதில் கிடைக்க வேண்டிய நேரத்தில், பேச்சாற்றல் மிக்க பிரதமரிடம் இருந்து மெளனமே வெளிப்படுகிறது.

எனவே 3 நாள் நடைபெறும் இக்கூட்டத்தில் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளை திறந்த மனதுடன் தெரிவிக்க வேண்டும். இது கட்சியை ஆய்வு செய்வதற்கான கூட்டமாக மட்டுமன்றி அா்த்தமுள்ள சுயபரிசோதனைக்கான கூட்டமாகவும் இருக்க வேண்டும் என்றாா் சோனியா காந்தி.

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. இந்த ஆண்டு இறுதியில் குஜராத், ஹிமாசலப் பிரதேசத்திலும், அடுத்த ஆண்டு வேறு சில மாநிலங்களிலும் பேரவைத் தோ்தல்கள் நடைபெறவுள்ளன. வரும் 2024-இல் மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தல்களைச் சந்திப்பதற்கு கட்சியைத் தயாா்படுத்தும் வகையில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com