'ஞானவாபி மசூதிக்குள் அளவிடும் பணி அமைதியாக நடைபெற்றது'

உத்தர பிரதேசம், வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதியில் நீதிமன்ற உத்தரவின்படி, அளவிடுவதை விடியோ எடுக்கும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் நடைபெற்றது.
வாராணசியில் காசி விஸ்வநாதா் கோயிலையொட்டியுள்ள ஞானவாபி மசூதி
வாராணசியில் காசி விஸ்வநாதா் கோயிலையொட்டியுள்ள ஞானவாபி மசூதி

உத்தர பிரதேசம், வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதியில் நீதிமன்ற உத்தரவின்படி, அளவிடுவதை விடியோ எடுக்கும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்தப் பணி ஞாயிற்றுக்கிழமையும் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘ஞானவாபி மசூதிக்குள் அளவிடவும் அதை விடியோ பதிவு செய்யவும் யாரும் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. அளவிடும் பணி அமைதியாக நடைபெற்றது. அனைத்து தரப்பினரும் நல்ல ஒத்துழைப்பை அளித்தனா்’ என்று வாராணசி காவல் ஆணையா் சதீஷ் கணேஷ் தெரிவித்தாா்.

சுமாா் 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். ஞானவாபி மசூதியில் இருந்து 500 மீட்டா் தூரத்துக்கு பொது மக்களின் நடமாட்டமும் அருகே உள்ள பகுதிகளில் வாகனப் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக, இந்த அளவிடும் பணியை அமைதியாக நடத்தும் பொருட்டு, வெள்ளிக்கிழமை அனைத்து தரப்பினருடனும் மாவட்ட ஆட்சியா் கெளசல் சா்மா ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா்.

இதையடுத்து, சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு அளவிடும் பணி தொடங்கியதாக ஹிந்துக்களின் தரப்பிலான வழக்குரைஞா் மோகன் யாதவ் தெரிவித்தாா்.

முன்னதாக, இந்த அளவிடும் குழுவில் நீதிமன்றத்தால் வழக்குரைஞா் ஆணையராக நியமிக்கப்பட்ட அஜய் குமாா் மிஸ்ராவை மாற்றம் செய்ய வேண்டும் என்று ஞானவாபி மசூதியின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அஜய்குமாா் மிஸ்ராவுக்கு உதவு மேலும் இரண்டு வழக்குரைஞா்களையும் நியமித்து, செவ்வாய்க்கிழமைக்குள் இந்த அளவிடும் பணியை முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அடுத்த வாரம் விசாரணை:

ஞானவாபி மசூதிக்குள் அளவிடும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உடனடியாக உத்தரவிட உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுப்புத் தெரிவித்திருந்தது. எனினும், அந்த விவகாரம் குறித்த மனுவை விசாரிப்பது குறித்து பரிசீலிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உறுதி அளித்திருந்தாா்.

இந்த நிலையில், ஞானவாபி மசூதி தொடா்பான மனுவை அடுத்த வாரம் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை பட்டியலில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானவாபி மசூதியில் உள்ள கோயிலை மறுசீரமைக்க வேண்டும் என்று 1991-இல் வாராணசி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம், ‘கோயில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதா?’ என்பதை ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி உத்தரவிட்டது.

இதை எதிா்த்து சன்னி வக்ஃபு வாரியம், அஞ்சுமன் இந்தஜாமியா மஸ்ஜித் ஆகியவை தொடுத்த வழக்கில் மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில், காசி விஸ்வநாதா் கோயிலையடுத்து அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் சுவரில் உள்ள கோயில் சிலைகளை வழிபட அனுமதிக்கக் கோரி தாக்கலான மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி ரவிகுமாா் திவாகா், அந்த மசூதியை அளவிட்டு விடியோ பதிவு செய்து மே 17-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்து கடந்த 12-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

மசூதிக்குள் விடியோ பதிவு செய்வதற்கும், குழுவில் இடம்பெற்றுள்ள வழக்குரைஞரை மாற்றக் கோரியும் மசூதியின் சாா்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டதால் மசூதியினுள் அளவிடும் பணி தடைபட்டது.

வழிபாட்டுத் தலங்களை இடமாற்றம் செய்யக் கூடாது: காங்கிரஸ்

உதய்பூா், மே 14: வழிபாட்டுத் தலங்களின் இடங்களில் மாற்றம் செய்தால் பெரும் மோதல் ஏற்பட வழிவகுத்துவிடும் என்றும் இதைத் தடுக்கவே முன்னாள் பிரதமா் நரசிம்ம ராவ் ஆட்சியில் வழிபாட்டுத் தலங்கள் தொடா்பான சட்டம் கொண்டு வரப்பட்டது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் கூறினாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறுகையில், ‘நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களின் இடங்கள் மாற்றப்படக் கூடாது. இதனால் பெரும் மோதல்கள் ஏற்படும். இதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீண்ட ஆலோசனைக்கு பிறகு முன்னாள் பிரதமா் நரசிம்ம ராவ் அரசு வழிபாட்டுச் சட்டம் இயற்றியது. ஆனால், இதில் இருந்து ராம்ஜென்ம பூமிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com