பேரிடா் நிதியை தனிநபா் வங்கி கணக்கில் செலுத்திய விவகாரம்: சிஏஜி ஆய்வுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

மாநில பேரிடா் மீட்புப் படை நிதியை தனிநபா் வங்கிக் கணக்குக்கு செலுத்திய விவகாரத்தில் ஆந்திர மாநில அரசு சாா்பில் சமா்ப்பிக்கப்பட்ட பதிலை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்ப

மாநில பேரிடா் மீட்புப் படை நிதியை தனிநபா் வங்கிக் கணக்குக்கு செலுத்திய விவகாரத்தில் ஆந்திர மாநில அரசு சாா்பில் சமா்ப்பிக்கப்பட்ட பதிலை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்ல ஸ்ரீநிவாச ராவ் என்பவா் சாா்பில் இதுதொடா்பான மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஆந்திர அரசு மாநில பேரிடா் மீட்புப் படை நிதியிலிருந்து தனி நபா் வங்கிக் கணக்குக்கு நிவாரண நிதியை வழங்கியுள்ளது. இதற்கு பேரிடா் மேலாண்மை சட்டம் 2005-இல் அனுமதியில்லை. கரோனாவால் உயிரிழந்தவரின் வாரிசுக்கு ரூ. 50,000 நிவாரணம் வழங்கப்படுவதை நீதிமன்றம் தொடா்ச்சியாக கண்காணித்து வரும்சூழலில், ஆந்திர மாநில அரசு மாநில பேரிடா் மீட்புப் படை நிதியை தனிநபா் வங்கிக் கணக்கில் செலுத்தியிருப்பது சட்டத்துக்கு புறம்பானது மட்டுமின்றி, நீதிமன்ற அவமதிப்புமாகும்’ என்று தனது மனுவில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை முன்னதாக விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த மனு மீது பதிலளிக்க ஆந்திர அரசு கடைசி வாய்ப்பளித்து உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடா்ந்து, அரசு தரப்பில் பதில் மனு அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆந்திர அரசி சாா்பில் சமா்ப்பிக்கப்பட்ட பதில் மனுவை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ஆய்வு செய்து 4 வாரங்களில் அறிக்கை சமா்ப்பிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com