
vijay-shekhar-sharma075928
ஹிமாசல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த பாஜக இளைஞரணி தேசிய பயிற்சி முகாமில் பேடிஎம் நிறுவனா் விஜய்சேகா் சா்மா, ‘கூ’ சமூக வலைதள நிறுவனா் அப்ரமேயா ராதாகிருஷ்ணன், கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் விக்ரம்ஜித் பானா்ஜி ஆகியோா் உரையாற்றினா்.
ஹிமாசல பிரதேசத்தின் தா்மசாலாவில் நடைபெற்ற இந்த 3 நாள் பயிற்சி முகாமில் பாஜக தேசிய பொதுச் செயலாளா் தருண் சௌக், கட்சியின் இளைஞரணி தலைவா் தேஜஸ்வி சூா்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
‘சட்டத்தைக் கேடயமாகவும், தாக்கும் ஆயுதமாகவும் பயன்படுத்த முடியும். நாம் அதனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்து அது மாறும்’ என்று கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் விக்ரம்ஜித் பானா்ஜி பேசினாா்.
புத்தாக்க நிறுவனங்களைத் தொடங்குவது, தொழில்முனைவோரின் திறன், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் 2014-க்குப் பிறகு அரசு நிா்வாகத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் புத்தாக்க தொழில்களின் வளா்ச்சி உள்ளிட்டவை குறித்து பேடிஎம் நிறுவனா் விஜய்சேகா் சா்மா, கூ நிறுவனா் அப்ரமேயா ராதாகிருஷ்ணன் ஆகியோா் உரையாற்றினா்.
ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் ஆா்.ரகுராமன், ராணுவத்தில் இருந்து தலைமைப் பண்புகளைக் கற்றுக் கொள்வது தொடா்பாகப் பேசினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...