அஸ்ஸாமில் வெள்ளம், நிலச்சரிவு: சாலை, ரயில் வழித் தொடர்புகள் துண்டிப்பு

அஸ்ஸாமில் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக அந்த மாநிலத்துக்கும் திரிபுரா, மிஸோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கும் இடையிலான சாலை மற்றும் ரயில் வழித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
அஸ்ஸாமில் வெள்ளம், நிலச்சரிவு: சாலை, ரயில் வழித் தொடர்புகள் துண்டிப்பு

அஸ்ஸாமில் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக அந்த மாநிலத்துக்கும் திரிபுரா, மிஸோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கும் இடையிலான சாலை மற்றும் ரயில் வழித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
 வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாமிலும் மேகாலயத்திலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அஸ்ஸாமின் தீமாஹசாவோ மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக சாலை மற்றும் ரயில் வழித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேகாலயத்தில் கிழக்கு ஜைந்தியா மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக தெற்கு அஸ்ஸாமில் உள்ள பராக் பள்ளத்தாக்குடனும் திரிபுரா, மிஸோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுடனும் தரை வழித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
 கிழக்கு ஜைந்தியா மலை சரக போலீஸார் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிய நிலச்சரிவுகள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளனர்.
 இது தொடர்பாக அவர்கள் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் "தேசிய நெடுஞ்சாலை 6-ஐ ஒட்டி அமைந்துள்ள குலியாங் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் புதிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சில்சார்-ரதசேரா-கிளீரியத் வழித்தடம் முடங்கியுள்ளது. இந்த வழித்தடத்தை சரிசெய்யவும் சாலை துண்டிப்பால் நடுவழியில் சிக்கியுள்ள பயணிகளுக்கு உதவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த வழித்தடம் சரி செய்யப்படும் வரை இச்சாலையை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அஸ்ஸாம் காவல் துறையின் சிறப்பு இயக்குநர் ஜி.பி.சிங் கேட்டுக் கொண்டுள்ளார். சாலை வழித்தடம் சரியாகும் வரை சில்சாரில் இருந்து குவஹாட்டி நோக்கி செல்வதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 கனமழை காரணமாக தீமாஹசாவோ மாவட்டத்தில் தகவல் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. நிலச்சரிவுகளும் சாலைகள் புதையுண்டதும் இந்த மாவட்டத்துக்கான சாலை வழி தகவல் தொடர்புகளை துண்டித்துள்ளன.
 வடகிழக்கு மாகாண ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில் லும்டிங்-பதர்பூர் பிரிவில் நிலச்சரிவுகளும், தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதும் பராக் பள்ளத்தாக்கு, மணிப்பூர், திரிபூரா, மிஸோரம் ஆகியவற்றுக்கான ரயில் வழித் தொடர்பை துண்டித்துள்ளன என்றார். இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
 இதனிடையே, அஸ்ஸாமில் சாலை மற்றும் ரயில் வழித்தடம் துண்டிக்கப்பட்டுள்ளதால் விமானக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. இது தொடர்பாக சில்சார் எம்.பி. ராஜ்தீப் ராய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் "சில்சார்-குவாஹாட்டி விமானக் கட்டணம் ரூ.31,000-ஐ எட்டிவிட்டது. 300 கி.மீ. நீளம் கொண்டதும் 25 நிமிட பயண நேரம் கொண்டதுமான இந்த வழித்தடத்துக்கு இந்த அளவுக்கு கட்டணம் உயர்ந்துள்ளது. இப்பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
 8 பேர் பலி; 4 லட்சம் பேர் பாதிப்பு: மழை வெள்ளத்தால் அஸ்ஸாமின் 20 மாவட்டங்களில் உள்ள 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது 26 மாவட்டங்களில் உள்ள 4,03,352 பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது என்று அஸ்ஸாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com