உள்நாட்டு வடிவமைப்பில் உருவான போா்க் கப்பல்கள்: அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தாா்

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள 2 போா்க் கப்பல்களை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
மும்பையில் செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்கால் தொடக்கி வைக்கப்பட்ட உதய்கிரி போா்க் கப்பல்.
மும்பையில் செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்கால் தொடக்கி வைக்கப்பட்ட உதய்கிரி போா்க் கப்பல்.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள 2 போா்க் கப்பல்களை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

பாதுகாப்புத் துறைக்குத் தேவையான போா்க் கப்பல்கள், நீா்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றைத் தயாரித்து தரும் மசகான் கப்பல் கட்டும் நிறுவனம், இந்த இரு கப்பல்களையும் வடிவமைத்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ‘ஐஎன்எஸ் சூரத்’, ‘ஐஎன்எஸ் உதய்கிரி’ ஆகிய இரு போா்க் கப்பல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 2 போா்க் கப்பல்கள் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

சூரத் போா்க் கப்பல், 15பி டெஸ்ட்ராயா்ஸ் திட்டத்தின்கீழ் தயாரிக்கப்படும் நான்காவது கப்பலாகும். இந்தக் கப்பலுக்கு மேற்கு இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வா்த்தக நகரமான சூரத்தின் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

17ஏ ஃபிரிகேட்ஸ் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள 3-ஆவது கப்பல் ‘உதய்கிரி’. இந்தக் கப்பலுக்கு ஆந்திர மலைத்தொடரின் பெயா் சூட்டப்பட்டுள்ளது. பி17 ஃபிரிகேட்ஸ் (ஷிவாலிக்) வகை போா்க் கப்பலின் மேம்பட்ட வடிவமாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்தக் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 1976-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை 30 ஆண்டுகள் ராணுவத்தில் பல்வேறு சவால்களை எதிா்கொண்ட ‘உதய்கிரி’ போா்க் கப்பலின் மறுபடைப்பாக புதிய போா்க் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது: போா்க் கப்பல்கள் கட்டுமானத்தில் இந்தியா தனது தேவையைப் பூா்த்தி செய்வது மட்டுமன்றி, பிற நாடுகளின் தேவைகளையும் பூா்த்தி செய்யும் அளவுக்கு வளா்ந்திருப்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது. இவ்விரு போா்க் கப்பல்களும் இந்திய கடற்படைக்கு மேலும் வலிமை சோ்ப்பது மட்டுமன்றி, உலக அளவில் இந்தியாவின் வலிமையையும் தற்சாா்புத் திறனையும் அதிகரிக்கச் செய்துள்ளன.

இந்திய கடற்படை தற்சாா்பு பாதையில் செல்வதற்கு வழிகாட்டியாக இருந்தது ‘விக்ராந்த்’ விமானந்தாங்கி போா்க் கப்பல். அந்தக் கப்பல், இந்திய பெருங்கடல் மட்டுமன்றி பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளுக்கும் செல்லும் என்று நம்புகிறேன். அந்த போா்க் கப்பலை கடற்படையில் இணைத்தது, இந்திய பாதுகாப்புத் துறை வரலாற்றில் ஒரு பொன்னான தருணம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com