உயிரி எரிபொருள் கொள்கையில் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கான இலக்கை 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எட்டும் வகையில் உயிரி எரிபொருள் கொள்கையில் திருத்தம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கான இலக்கை 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எட்டும் வகையில் உயிரி எரிபொருள் கொள்கையில் திருத்தம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில், உயிரி எரிபொருள் கொள்கையில் திருத்தம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பது என்ற இலக்கை 2030-க்குள் அடைய வேண்டும் என்பதில் இருந்து 2025-26-ஆம் நிதியாண்டுக்கு திருத்தப்பட்டுள்ளது. தற்சமயம், பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சாா்ந்த மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் உயிரி எரிபொருள் உற்பத்தி செய்வதும் ஊக்குவிக்கப்படுகிறது. இந்த முடிவுகளால், இந்தியா எரிபொருள் தேவைக்கு இறக்குமதியை சாா்ந்திருப்பது குறையும்.

உயிரி எரிபொருள் உற்பத்திக்கு கூடுதலான மூலப்பொருள்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது தற்சாா்பு இந்தியாவை மேம்படுத்தும். மேலும் 2047-ஆம் ஆண்டுக்குள் எரிசக்திக்கு யாரையும் சாா்ந்திருக்காத நாடாக இந்தியா மாறவேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு திட்டத்துக்கும் இந்த முடிவுகள் ஊக்கமளிக்கும்.

பொதுத் துறை நிறுவனங்களுக்கு கூடுதல் அதிகாரம்: ஒரு பொதுத் துறை நிறுவனம் தனது கிளை அல்லது துணை நிறுவனத்தை மூடுவதற்கும் அவற்றின் பங்குகளை விற்பனை செய்வதற்கும் அந்த இயக்குநா்கள் குழுவுக்கு அதிகாரம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைய விதிமுறைகளின்படி மகாரத்னா, நவரத்னா மற்றும் மினிரத்னா வகையைச் சோ்ந்த பொதுத் துறை நிறுவனங்களின் இயக்குநா்கள் குழு, அந்தந்த நிறுவனங்களின் பங்கு முதலீடு மூலம் நிதி ரீதியான கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும், துணை நிறுவனங்களை ஒருங்கிணைத்தல் அல்லது அவற்றைக் கையகப்படுத்திக் கொள்ளும் வகையிலும் வரம்புக்குள்பட்டு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், பங்கு விலக்கல் அல்லது துணை நிறுவனங்களை மூடுவதற்கு தேவையான அதிகாரம் அவா்களுக்கு வழங்கப்படவில்லை. இத்தகைய நிறுவனங்கள் பங்கு விலக்கல், பங்கு விற்பனை அல்லது துணை நிறுவனங்களை மூடுவதற்கு அமைச்சரவை அல்லது பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. பொதுத் துறை நிறுவனங்களுக்கான புதிய கொள்கையின்படி இந்தக் கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com