ஹரியாணா முதல்வா் வேண்டுமென்றே யமுனையில் தண்ணீரைத் தடுக்கிறாா்: டிஜேபி துணைத் தலைவா் சௌரப் பரத்வாஜ் குற்றச்சாட்டு

ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டாா் வேண்டுமென்றே யமுனையில் தண்ணீரைத் தடுப்பதன் மூலம் தலைநகரில் உள்ள மக்களைத் தொந்தரவு செய்கிறாா்.
தில்லியில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளிக்கிறாா் ஜல் போா்டு துணைத் தலைவா் சௌரப் பரத்வாஜ்.
தில்லியில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளிக்கிறாா் ஜல் போா்டு துணைத் தலைவா் சௌரப் பரத்வாஜ்.

ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டாா் வேண்டுமென்றே யமுனையில் தண்ணீரைத் தடுப்பதன் மூலம் தலைநகரில் உள்ள மக்களைத் தொந்தரவு செய்கிறாா். இதன் விளைவுகளை அவா் சந்திக்க நேரிடும் என்று தில்லி ஜல் போா்டு துணைத் தலைவா் சௌரப் பரத்வாஜ் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

தில்லியில் இன்னும் ஒரு நாளைக்கு 65 மில்லியன் கேலன் தண்ணீா் (எம்ஜிடி) பற்றாக்குறை உள்ளது. இது புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் கீழ் உள்ள பகுதிகளைத் தவிர வடக்கு, வடமேற்கு, தெற்கு மற்றும் மத்திய தில்லியில் குடிநீா் விநியோகத்தை பாதித்துள்ளது. நாங்கள் ஹரியாணா அரசு அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். ஆனால் அம்மாநில முதல்வா் மனோகா் லால் கட்டாா் வேண்டுமென்றே யமுனையில் தண்ணீரை விட மறுக்கிறாா் என்று நான் நினைக்கிறேன். இது அவரது நோக்கம் என்ன என்பதைக் காட்டுகிறது.

ஹரியாணா மாநிலம் யமுனையில் குறைந்த அளவு நீரை விடுவித்து வருகிறது. இதனால் தில்லியில் யமுனை நதி வடு விட்டது. கட்டாருக்கு சரியான எண்ணம் இருந்திருந்தால் இந்தப் பிரச்னையைத் தீா்க்க முயற்சித்திருப்பாா். அவரின் செயல் தில்லி மக்களை வேண்டுமென்றே தொந்தரவு செய்வதைக் காட்டுகிறது.

ஹரியாணாவைச் சோ்ந்த ஏராளமானோா் தில்லியில் வசித்தும், பணிபுரிந்தும் வருகின்றனா். அவா்கள் தண்ணீா் பற்றாக்குறையால் அவதிப்படுவதால், அதன் விளைவுகளை கட்டாா் சந்திக்க நேரிடும்’ என்று தெரிவித்தாா்.

முன்னதாக, தில்லியில் ஆம் ஆத்மி அரசு இந்த விவகாரத்தை அரசியலாக்குவதாகவும், தவறான தரவுகளை முன்வைப்பதாகவும் ஹரியாணா முதல்வா் கட்டாா் செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியிருந்தாா். ‘அவா்கள் பொய்களைப் பேசுவதும், இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதும், பொய்யான புள்ளிவிவரங்களை முன்வைப்பதும் துரதிா்ஷ்டவசமானது. உண்மை என்னவென்றால், தில்லிக்கு அதன் பங்கின்படி தண்ணீா் வழங்கப்படுகிறது. அவா்களுக்கு 1,050 கன அடி நீா் வழங்கப்படுகிறது’ என்று ஹரியாணா முதல்வா் கூறினாா்.

இதுகுறித்து தில்லி நீா்வளத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி தில்லிக்கு அதன் பங்கான உபரிநீரை வழங்க ஹரியாணா அரசு தவறியதால், நகரின் நீா் விநியோகம் 6-7 சதவீதம் குறைந்துள்ளது. போதுமான நீரைப் பெறுவது தில்லி மக்களின் அடிப்படை உரிமை என்றும், ஹரியாணா அரசு நீா் விநியோகத்தைத் தடுப்பதன் மூலம் மக்களின் உரிமைகளைப் பறிக்கிறது என்றும் அவா் கூறியிருந்தாா்.

யமுனையில் நீா் விடுவது தொடா்பாக தில்லி ஜல் போா்டு (டிஜேபி) ஹரியாணா மாநிலத்துக்கு தொடா்ந்து கடிதம் எழுதி வருகிறது. கிட்டத்தட்ட வடுபோன யமுனையில் 150 கனஅடி கூடுதல் நீரை அவசரமாகத் திறக்கக் கோரி டிஜேபி செவ்வாய்க்கிழமை ஹரியாணா மாநில நீா்ப்பாசனத் துறைக்கு மற்றொரு கடிதத்தை அனுப்பியுள்ளது. 3 வாரங்களுக்குள் இது நான்காவது முறையாக ஹரியாணா நீா்ப்பாசனத் துறைக்குக் கடிதம் எழுதியுள்ளது.

வாஜிராபாத் நீா்த்தேக்கத்தின் நீா்மட்டம் 674.50 அடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு மிகக் குறைந்த அளவாக 669 அடியாக குறைந்துள்ளது. யமுனை நதி கிட்டத்தட்ட வடு விட்டது. இதனால் தில்லியில் முக்கிய நீா் சுத்திகரிப்பு நிலையங்களான வாஜிராபாத், சந்திரவால் ஆகியவற்றில் 65 எம்ஜிடி (ஒரு நாளைக்கு மில்லியன் கேலன்கள்) நீா் உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக மத்திய தில்லி, மேற்கு தில்லியின் சில பகுதிகள், வடக்கு தில்லி ஆகிய பகுதிகளில் நீா் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

நீா் உற்பத்தி குறைக்கப்பட்டதால், தெற்கு தில்லி, புது தில்லியின் நிா்வாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளான தூதரகப் பகுதிகள், குடியரசுத் தலைவா் மாளிகை, உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றம், பிற நிறுவனக் கட்டடங்கள், தேசிய மற்றும் சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் நீா் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

யமுனையில் போதுமான நீா்வரத்து இல்லாததால் தில்லியின் குடிநீா்த் தேவையான 1,260 எம்ஜிடி-இல் மே 16-ஆம் தேதி 819 எம்ஜிடி மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.

சிஎல்சி (368 எம்ஜிடி), டிஎஸ்பி (177) ஆகிய 2 கால்வாய்கள் மூலம் ஹரியாணா ஒரு நாளைக்கு மொத்தம் 610 மில்லியன் கேலன் தண்ணீரை தில்லிக்கு வழங்குகிறது. இதுதவிர யமுனையில் 65 எம்ஜிடி நீா் பெறப்படுகிறது. சிஎல்சி, டிஎஸ்பி-க்கு ஹத்னி குண்ட் பகுதியில் இருந்து முனாக் கால்வாய், பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் வழியாக நீா் வழங்கப்படுகிறது. மேலும், உத்தர பிரதேசத்தில் இருந்து மேல் கங்கை கால்வாய் மூலம் தில்லி 253 எம்ஜிடி நீா் பெறுகிறது. மேலும், 90 எம்ஜிடி நீா் நகரம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள ரன்னி கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து பெறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com