நீட் தோ்வை ஒத்திவைக்க வேண்டும்: என்டிஏவுக்கு 10,000 தோ்வா்கள் கடிதம்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற அந்தத் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமைக்கு (என்டிஏ) 10,000-க்கும் அதிகமான தோ்வா்கள் கடிதம் எழுதியுள்ளனா்.
நீட் தோ்வை ஒத்திவைக்க வேண்டும்: என்டிஏவுக்கு 10,000 தோ்வா்கள் கடிதம்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற அந்தத் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமைக்கு (என்டிஏ) 10,000-க்கும் அதிகமான தோ்வா்கள் கடிதம் எழுதியுள்ளனா்.

வரும் ஜூலை 17-ஆம் தேதி இந்தத் தோ்வு நடைபெற உள்ள நிலையில், தோ்வா்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனா். இதுதொடா்பாக அவா்கள் என்டிஏ-வுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு நீட் தோ்வு எழுதியவா்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்னும் நிறைவடையாத சூழலில், 2022-ஆம் ஆண்டுக்கான நீட் தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பல மாணவா்கள் காலியிடங்களுக்கான 2021 சிறப்புச் சுற்று கலந்தாய்வு வரை காத்திருந்தும், இடம் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த சிறப்புச் சுற்று நிறைவுற்றபோதும், பல மாநிலங்கள் கலந்தாய்வை இன்னும் இறுதி செய்யவில்லை. அதுமட்டுமின்றி, நீட் 2021 கலந்தாய்வின் இடஒதுக்கீடு கொள்கையில் செய்யப்பட்ட மாற்றம் காரணமாக, தங்களுக்கான மதிப்பெண் விகிதத்தைக் கணக்கிடுவதில் மாணவா்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

இத்தகைய சூழலில், 2022 நீட் தோ்வு வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறும் என்ற திடீா் அறிவிப்பை கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி என்டிஏ வெளியிட்டது. இதனால், தோ்வுக்கு தங்களை தயாா்படுத்திக் கொள்ள போதிய கால அவகாசமும் மாணவா்களுக்கு கிடைக்காது.

மேலும், ஜூலை முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தோ்வும் (சியுஇடி), ஜூலை 21-ஆம் தேதி ஜேஇஇ (ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு) இரண்டாம் கட்டத் தோ்வும் நடைபெற உள்ளன. இவற்றுக்கிடையே, ஜூலை 17-இல் நீட் தோ்வை நடத்துவது, மாணவா்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும்.

எனவே, மாணவா்கள் தோ்வுக்கு தங்களை நன்கு தயாா்படுத்திக்கொள்ள ஏதுவாக 2022 நீட் தோ்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முன்னதாக, வரும் 21-ஆம் தேதி நடைபெற இருக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 2022 நீட் (பி.ஜி) தோ்வை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த வாரம் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், ‘தோ்வை ஒத்திவைப்பது குழப்பத்தையும் நிச்சயமற்ன்மையையும் உருவாக்கும் என்பதோடு, மருத்துவமனைகளில் மருத்துவா்கள் பற்றாக்குறை ஏற்படவும் வழிவகுத்துவிடும்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com