ஞானவாபி மசூதிக்குள் கடவுள், நாகச் சிலைகள் : வழக்குரைஞர் அஜய் மிஸ்ரா

இந்து மக்களின் வழிபாட்டுச் சிலைகளும் காணப்பட்டதாக  நீதிமன்றத்தால் வழக்குரைஞா் ஆணையராக நியமிக்கப்பட்டு நீக்கப்பட்ட அஜய் குமாா் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி
வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி


வாராணசி: வாராணசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதிக்குள் ஏராளமான கடவுள் சிலைகளும், இந்து மக்களின் வழிபாட்டுச் சிலைகளும் காணப்பட்டதாக  நீதிமன்றத்தால் வழக்குரைஞா் ஆணையராக நியமிக்கப்பட்டு நீக்கப்பட்ட அஜய் குமாா் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

ஞானவாபி மசூதியின் ஆய்வுப் பணிகளுக்கு நீதிமன்றத்தால் வழக்குரைஞர் ஆணையராக நியமிக்கப்பட்ட அஜய் குமார் மிஸ்ரா, பிறகு, சில தகவல்களை கசியவிட்டதற்காக நீக்கப்பட்டார்.

ஞானவாபி மசூதியின் ஆய்வறிக்கையை முன்னாள் வழக்குரைஞர் ஆணையர் அஜய் குமார் மிஸ்ரா இன்று தாக்கல் செய்தார். 

அந்த ஆய்வறிக்கையில், சர்ச்சைக்குரிய இடத்தில் தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கும் வெளிப்பகுதியில் மிகப் பழமையான கோயில் இருந்தது. அதில் கடவுள்களின் சிலைகளும், தாமரைப் பூ போன்ற கற்சிலைகளும் காணப்பட்டன. நாகச் சிலைகளும், நாகாபரணங்கள் போன்றவையும் காணப்பட்டன. அங்கிருந்த கற்பலகைகள் மிகப்பெரிய கட்டடத்தின் பகுதி போன்று இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகழாய்வுப் பணியின்போது, மிகவும் பொறுப்பற்றத் தனமாக நடந்து கொள்வதாக அஜய் மிஸ்ராவை வழக்குரைஞர் ஆணையர் பொறுப்பிலிருந்து நீதிமன்றம் கடந்த செவ்வாயன்று நீக்கி உத்தரவிட்டிருந்தது.

அங்கிருந்த நான்கு சிலைகளுக்கு குங்குமம் இடப்பட்ட தடயம் தெரிந்தது. அங்கு விளக்கேற்றும் அமைப்புகளும் இருந்தன. அங்கிருந்த கற்பலகைகள், மிகவும் வேலைப்பாடுகள் கொண்டிருந்தன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம், வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதியில் நீதிமன்ற உத்தரவின்படி, ஆய்வு செய்யும் பணி பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அமைதியான முறையில் நடைபெற்றது. கடந்த திங்கள்கிழமை 3-ஆவது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற ஆய்வின்போது சிவலிங்கம் ஒன்று அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வாராணசியில் காசி விஸ்வநாதா் கோயில் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் புராதன கோயில் இருந்ததாக கூறப்படுகிறது. இங்கு உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில், விடியோ பதிவுடன் கூடிய அளவிடும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மசூதியில் இஸ்லாமியா்கள் தொழுகைக்கு முன்பாக கை, கால்களை சுத்தம் செய்யும் இடத்தில் சிவலிங்கம் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, மசூதியில் ஆய்வுப் பணியை ரத்து செய்யக் கோரி, மசூதியை நிா்வகிக்கும் அஞ்சுமன் இந்தஜாமியா மஸ்ஜித் நிா்வாகக் குழு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.எஸ். நரசிம்மா ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மசூதி வளாகத்தில் விடியோ பதிவுடன் கூடிய அளவிடும் பணி நடைபெற்றாலும், இஸ்லாமியா்கள் தடையின்றி தொழுகை நடத்தலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

முன்னதாக அளவிடும் பணியையொட்டி நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் ஆணையருக்கு மசூதியின் உள்பகுதியை படம்பிடிக்க அதிகாரம் கிடையாது என கூறி மசூதி கமிட்டியினா் ஆட்சேபம் தெரிவித்தால், ஆய்வுப் பணி கடந்த வாரம் தடைப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com