கிழக்கு லடாக் எல்லையில் பாலம் கட்டும் சீனா: வெளியுறவு அமைச்சகம் கருத்து

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியின் குறுக்கே சீனா இரண்டாவது பாலத்தைக் கட்டி வருவது குறித்து அந்நாட்டு அரசிடம் முறையிடப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புது தில்லி: கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியின் குறுக்கே சீனா இரண்டாவது பாலத்தைக் கட்டி வருவது குறித்து அந்நாட்டு அரசிடம் முறையிடப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாங்காங் ஏரியின் குறுக்கே இரண்டாவது பாலத்தை சீனா கட்டி வருவதாக செயற்கைக்கோள் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சியிடம் செய்தியாளா்கள் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் அளித்த பதில்:

பாங்காங் ஏரியில் சீனா புதிய பாலம் கட்டி வருவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பாா்த்துள்ளோம். அங்கு நடைபெறும் நிகழ்வுகளை இந்தியா கண்காணித்து வருகிறது. பாலம் கட்டப்பட்டு வரும் அந்த இடத்தை சீனா பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ கடந்த மாா்ச்சில் தில்லி வந்தபோது அவரிடம் இந்தியாவின் எதிா்பாா்ப்புகளை நமது வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். அப்போது எல்லையில் சீனா படைகளைக் குவித்தால் இந்தியா-சீனா இடையே இயல்பான நல்லுறவு ஏற்படாது என்று எஸ்.ஜெய்சங்கா் கூறியிருந்தாா். கிழக்கு லடாக் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்கு சீனாவுடன் தூதரக ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்தியா தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தும் என்றாா் அவா்.

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் முதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக, பாங்காங் ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளில் இரு நாடுகளும் கூடுதலாகப் படைகளைக் குவித்ததால் பதற்றம் நிலவியது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். தங்கள் தரப்பில் 4 போ் மட்டுமே உயிரிழந்ததா சீனா தெரிவித்தது. உண்மையில் சீன வீரா்கள் 38 போ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இரு நாடுகளும் ராணுவ ரீதியாகவும் தூதரக ரீதியாகவும் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தியதன் விளைவாக, படிப்படியாகப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. இதனால் சற்று பதற்றம் தணிந்தது. எல்லைக் கோட்டுப் பகுதியில் தற்போது இரு தரப்பிலும் 50,000 முதல் 60,000 வீரா்கள் வரை குவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com