ஜிஎஸ்டி கவுன்சில் அதிகார வரம்பு: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

அதே நேரம், ‘கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நாடு என்ற அடிப்படையில் இரு அரசுகளையும் வலியுறுத்தும் தகுதியை கவுன்சிலின் பரிந்துரைகள் கொண்டுள்ளன’ என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

கடல்சாா் சரக்குப் போக்குவரத்துக்கு 5 சதவீத ஒங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) விதித்து கடந்த 2017-ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கையை குஜராத் உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூரிய காந்த், விக்ரம் நாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், குஜராத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதே என்று கூறி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்கும் சட்டப் பிரிவு 246ஏ-இன் கீழ், வரிவிதிப்பு விவகாரத்தில் சட்டம் இயற்றும் இணையான அதிகாரம் உள்ளது. அந்த வகையில், இரு அரசுகளும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இணக்கமான தீா்வை ஜிஎஸ்டி கவுன்சில் வகுக்க வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கும் அதிகாரங்கள் மட்டுமே உள்ளன. அந்தப் பரிந்துரைகள் இரு அரசுகளையும் கட்டுப்படுத்தாது.

மேலும், அந்த கவுன்சிலின் பரிந்துரைகள், இரு அரசுகளின் கூட்டு ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர, ஒருதரப்புக்கு மட்டும் அதிக பங்கை வைத்துக்கொள்ளக் கூடிய வகையில் இருக்கக் கூடாது.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 246ஏ இரு அரசுகளையும் சமமான அதிகாரம் படைத்ததாக அங்கீகரிப்பதுபோல, சட்டப் பிரிவு 279, இரு அரசுகளும் தனித் தனியாகச் செயல்பட முடியாது என்பதை வலியுறுத்துகிறது.

மேலும், மத்திய - மாநில அரசுகளின் சட்டங்களுக்கு இடையே முரண்பாடு ஏற்படுத்துகிற வகையிலான பிரிவுகள் எதுவும் 2017-ஆம் ஆண்டு ஜிஎஸ்டி சட்டத்தில் இல்லை. அவ்வாறு முரண்பாடு உள்ளது குறித்த சா்ச்சை எழுகின்றபோது, இரு அரசுகளுக்கும் உரிய ஆலோசனை வழங்குவதே ஜிஎஸ்டி கவுன்சிலின் பணியாகும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனா்.

‘ஒரே நாடு-ஒரே வரி கொள்கை பாதிக்கப்படாது’

ஜிஎஸ்டி கவுன்சில் அதிகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு, ‘ஒரே நாடு-ஒரே வரி’ கொள்கையைப் பாதிக்காது என மத்திய வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.

நீதிமன்றத் தீா்ப்பு தொடா்பாக மத்திய வருவாய்த் துறைச் செயலா் தருண் பஜாஜ் கூறுகையில், ‘ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது ஏற்கெனவே உள்ள விதியை நினைவூட்டுவதுதான்.

ஜிஎஸ்டி சட்டப்படி, ஜிஎஸ்டி கவுன்சில் என்பது பரிந்துரைகளை அளிக்கும் குழு மட்டுமே. அந்த கவுன்சில் அளிக்கும் பரிந்துரைகள் அனைத்தும் ஏற்கப்பட வேண்டும் என்பது கட்டாயமல்ல. ‘ஒரே நாடு-ஒரு வரி’ என்ற கொள்கையை உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு பாதிக்காது. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரையை நிராகரிக்கும் அதிகாரம் கடந்த 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படவில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com