முதியவரை தாக்கிய வழக்கில் ஓராண்டு சிறை: சரணடைந்தார் சித்து

ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர்  நவ்ஜோத் சிங் சித்து, சரணடைய கால அவகாசம் கேட்டு, நிராகரிக்கப்பட்டதால் பாட்டியாலா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
முதியவரை தாக்கிய வழக்கில் ஓராண்டு சிறை: சரணடைந்தார் சித்து
முதியவரை தாக்கிய வழக்கில் ஓராண்டு சிறை: சரணடைந்தார் சித்து


புது தில்லி: ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர்  நவ்ஜோத் சிங் சித்து, சரணடைய கால அவகாசம் கேட்டு, நிராகரிக்கப்பட்டதால் பாட்டியாலா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

34 ஆண்டுகளுக்கு முன்பு காருக்கு வழிவிடுவது தொடா்பான பிரச்னையில் முதியவரை தாக்கி உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருந்த வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

நேற்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் நீதிமன்றத்தில் சரணடைந்ததாக அவரது ஊடக ஆலோசகர், நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் சரணடைந்த சித்துவுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, பிறகு அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1988-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. 

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த 1988-ஆம் ஆண்டு டிசம்பா் 27-ஆம் தேதி தன் நண்பா்களுடன் காரில் சென்ற நவ்ஜோத் சிங் சித்து, ஷெரன்வாலா கேட் சந்திப்பு பகுதியில் சாலையின் நடுவே தனது வாகனத்தை நிறுத்தியுள்ளாா். அப்போது, பின்னால் காரில் வந்த கா்நாம் சிங் (65) என்பவா், வாகனத்துக்கு வழிவிடுமாறு சித்துவிடம் கூறியுள்ளாா். இதில் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சித்து தாக்கியதில் கா்நாம் சிங் காயமடைந்துள்ளாா். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா். இந்த சம்பவத்தின்போது சித்துவுக்கு வயது 25 ஆகும்.

இந்த வழக்கை 1999-ஆம் ஆண்டு செப்டம்பரில் விசாரித்த விசாரணை நீதிமன்றம், வழக்கிலிருந்து சித்துவை விடுவித்து உத்தரவிட்டது. அதனை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பஞ்சாப் - ஹரியாணா உயா்நீதிமன்றம், சித்து உள்ளிட்டோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

இதனை எதிா்த்து சித்து தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை 2018-ஆம் ஆண்டு மே மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதே நேரம், 65 வயது முதியவருக்கு வேண்டுமென்றே பாதிப்பை ஏற்படுத்திய குற்றத்தை சித்து புரிந்துள்ளாா். எனவே, அவருக்கு சிறைத் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதிக்க முகாந்திரம் உள்ளது’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அதனைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்ட கா்நாம் சிங் குடும்பத்தாா் தரப்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சித்துவுக்கு விதிக்கப்படும் தண்டனை, தானாக முன்வந்து ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சிறிய குற்றத்துக்கான தண்டனையாக மட்டும் இருந்துவிடக் கூடாது’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த மறு ஆய்வு மனுவுக்கு பதிலளித்த சித்து, ‘அது விசாரணை நடைமுறைக்கு எதிரானது’ என்று கூறியிருந்தாா்.

இந்த மறு ஆய்வு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், எஸ்.கே.கெளல் அமா்வு முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘வழக்குப் பதிவில் சில தவறுகள் நடந்துள்ளதாக நாங்கள் உணா்ந்ததாலேயே, மறு ஆய்வு மனு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது. இதில், உரிய தண்டனை வழங்குவதில் தேவையற்ற அனுதாபம் காட்டப்படுமானால், அது நீதி நடைமுறையை கடுமையாகப் பாதிக்கும் என்பதோடு, சட்டத்தின் செயல்திறன் மீதான பொதுமக்களின் நம்பிக்கையும் குறைந்துவிடும். எனவே, சித்து தரப்பினருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட ரூ. 1,000 அபராதத் தொகையுடன், ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிப்பதும் பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகிறோம்’ என்று தீா்ப்பளித்தனா்.

சட்டத்தின் மாட்சிக்கு அடிபணிகிறேன் - சித்து: உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சட்டத்தின் மாட்சிக்கு அடிபணிகிறேன்’ என்று சித்து குறிப்பிட்டிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com