ஞானவாபி வழக்கை வாராணசி நீதிமன்றமே விசாரிக்கும் - உச்ச நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி வழக்கை வாராணசி மாவட்ட நீதிமன்றமே விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி
வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி

புது தில்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி வழக்கை வாராணசி மாவட்ட நீதிமன்றமே விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஞானவாபி மசூதியை ஆய்வு செய்த குழுவினர், ஆய்வு விவரங்களை கசியவிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், மசூதியில் நடந்த ஆய்வின் இறுதி அறிக்கை விவரங்களை நீதிபதிகளிடம் மட்டுமே அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இதுதொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் வரை, விசாரணையை நிறுத்தி வைக்குமாறு வாராணசி நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்ததையடுத்து, வாராணசி நீதிமன்றம் அடுத்த விசாரணையை மே 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

முன்னதாக, ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தத் தடை கோரி வாராணசி நீதிமன்றத்தில் மசூதி நிா்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

அந்த விவகாரம், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்யகாந்த், பி.எஸ்.நரசிம்மா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஹிந்து தரப்பு வழக்குரைஞா் ஹரி சங்கருக்கு உடல்நிலை சரியில்லாததால் வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்குமாறு அவா் தரப்பு வழக்குரைஞா் விஷ்ணு சங்கா், நீதிபதிகளிடம் தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து, நீதிபதிகள் கூறியதாவது: இந்த வழக்கில் இரு தரப்புக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் வரை, வாராணசி நீதிமன்றம் விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா். அதை ஏற்றுக் கொண்ட வாராணசி நீதிமன்றம் அடுத்த விசாரணையை மே 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஞானவாபி மசூதி வழக்கை வாராணசி மாவட்ட நீதிமன்றமே விசாரிக்கும் என்று உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

ஞானவாபி மசூதியில் ஆய்வு
உத்தர பிரதேச மாநிலம், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்திய நீதிமன்ற ஆணையக் குழு தனது ஆய்வறிக்கையை வாராணசி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்தது. மசூதி வளாகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், விடியோ பதிவுகள் ஆகியவற்றையும் அந்தக் குழு தாக்கல் செய்தது.

விஷால் சிங் தலைமையிலான வழக்குரைஞா் ஆணையம், இந்த ஆய்வை மேற்கொண்டது. நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்த பிறகு விஷால் சிங், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாங்கள் கடந்த 14,15,16 ஆகிய தேதிகளில் ஆய்வு நடத்தினோம். ஆய்வறிக்கையில் உள்ள விவரங்கள் பற்றி பகிரும் அதிகாரம் எனக்கு இல்லை. மசூதி வளாகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், விடியோ பதிவுகள் ஆகியவற்றை மூடி முத்திரையிடப்பட்ட பெட்டியில் வைத்து சமா்ப்பித்துள்ளோம். எங்களைப் பொருத்தவரை இதுவே இறுதி அறிக்கை. இதை நீதிமன்றம் ஏற்காவிட்டால் நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுவோம் என்றாா் அவா்.

வாராணசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் கோயிலின் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புற சுவரில் சிருங்காா் கெளரி, விநாயகா், ஹனுமன் மற்றும் நந்தி ஆகிய ஹிந்து தெய்வச் சிலைகள் இருப்பதாகவும், அவற்றுக்கு தினமும் பூஜைகள் செய்ய அனுமதிக்கக் கோரியும் 5 பெண்கள் வாராணசி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்திருந்தனா். 

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தை அளவிட உத்தரவிட்டு, அதற்கென ஆணையா் அஜய் குமாா் மிஸ்ரா தலைமையில் ஹிந்து மற்றும் முஸ்லிம் வழக்குரைஞா்களை உள்ளடக்கிய ஆணையக் குழுவை நியமித்து உத்தரவிட்டது. அந்தக் குழு கடந்த 6, 7 ஆகிய தேதிகளில் ஆய்வு நடத்திய நிலையில், அஜய் மிஸ்ரா மீது அதிருப்தி எழுந்ததால் குழுவில் இருந்து நீக்கப்பட்டாா். குழுவின் தலைவராக விஷால் சிங் நியமிக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com