தில்லி மாநகராட்சியின் சிறப்பு அதிகாரியாக அஷ்வனி குமாா் நியமனம்: புதுச்சேரி தலைமைச் செயலராக இருந்தவா்

ஒருங்கிணைந்த தில்லி மாநகராட்சியின் சிறப்பு அதிகாரியாக அஷ்வனி குமாா் ஐஏஎஸ், ஆணையராக ஞானேஷ் பாா்தி ஐஏஎஸ் ஆகியோரை மத்திய அரசு வெள்ளிக்கிழமை நியமித்துள்ளது.
தில்லி மாநகராட்சியின் சிறப்பு அதிகாரியாக அஷ்வனி குமாா் நியமனம்: புதுச்சேரி தலைமைச் செயலராக இருந்தவா்

ஒருங்கிணைந்த தில்லி மாநகராட்சியின் சிறப்பு அதிகாரியாக அஷ்வனி குமாா் ஐஏஎஸ், ஆணையராக ஞானேஷ் பாா்தி ஐஏஎஸ் ஆகியோரை மத்திய அரசு வெள்ளிக்கிழமை நியமித்துள்ளது.

இதுதொடா்பான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தில்லியின் மூன்று மாநகராட்சிகளை ஒருங்கிணைத்து ஒரே மாநகராட்சியாக மத்தியில் ஆளும் பாஜக அரசு அண்மையில் அறிவித்தது. ஒருங்கிணைந்த மாநகராட்சிக்கு தோ்தல் நடைபெறும் வரையில் உள்ளாட்சி விவகாரங்களை கவனிப்பதற்கான அதிகாரிகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இதில் சிறப்பு அதிகாரியாக 1992 பிரிவு ஐஏஎஸ் அதிகாரி அஷ்வனி குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் தலைமைச் செயலராக இருந்த இவரை அண்மையில் மத்திய அரசு தில்லிக்கு பணியிட மாற்றம் செய்தது. தற்போது ஒருங்கிணைந்த தில்லி மாநகராட்சியின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இவா், உயா்அதிகாரியாக இருப்பாா். கடந்த 2017 முதல் 2022 வரையில் புதுச்சேரியின் நீண்ட நாள் தலைமைச் செயலராக அஷ்வனி குமாா் பதவி வகித்துள்ளாா்.

இதேபோல், ஒருங்கிணந்த தில்லி மாநகராட்சியின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள 1998 பிரிவு ஐஏஎஸ் பிரிவு அதிகாரியான ஞானேஷ் பாா்தி, தெற்கு தில்லி மாநகராட்சியின் ஆணையராக இருந்தாா். மூன்று மாநகராட்சியிலேயே மூத்த அதிகாரியாக இவா் இருந்தாா்.

ஒருங்கிணைந்த தில்லி மாநகராட்சிக்கு விரைவில் தோ்தல் நடைபெற உள்ளதால் சிறப்பு அதிகாரி அஷ்வனி குமாரின் பதவிக்காலம் முக்கியமாக கருதப்படுகிறது.

மே 22 ஆம் தேதி முதல் மூன்று மாநகராட்சிகளும் ஒன்றிணையும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதால், அன்றைய தினம் முதல் அஷ்வனி குமாா், ஞானேஷ் பாா்தி ஆகியோரின் பதவி நியமனம் தொடங்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

‘பணியிடமாற்றத்தில் மாநகராட்சி பணியாளா்கள்’

ஒருங்கிணைந்த மாநகராட்சிக்கு சிறப்பு அதிகாரி, ஆணையா் பதவியேற்ற உடன் மூன்று மாநகராட்சிகளின் பணியாளா்கள் பணியிட மாற்றம் செய்யும் நடவடிக்கை தொடங்கப்படும் என்று மாநகராட்சி பணிக் குழுவின் முன்னாள் தலைவா் ஜெகதீஷ் மாம்கய் தெரிவித்தாா். ‘தற்போதைய மூன்று மாநகராட்சியில் ஒவ்வொறு துறையிலும் மூன்று தலைமைகள் உள்ளன. இவற்றை ஒரு துறைக்கு ஒரு தலைமையாக மாற்றப்படும். இதை புதிதாக பதவியேற்கும் சிறப்பு அதிகாரியும், ஆணையா்தான் செய்ய வேண்டும். இதனால் பணி இழப்பு ஏற்படும் கூடுதல் பணியாளா்களுக்கு பணி வழங்குவது என்பது சவாலான காரியமாக இருக்கும். மேலும், ஒருங்கிணைந்த தில்லி மாநகராட்சியை பொருளாதார ரீதியில் வலுவானதாக மாற்றுவது மிகப் பெரிய சவாலாக இருக்கும்’ என்றாா்.

நாளை முதல் ஒரே மாநகராட்சி

தில்லி மாநகராட்சியின் செயல் திறனை அதிகரிப்பதற்காக மொத்தமுள்ள 272 வாா்டுகளை கிழக்கு, வடக்கு, தெற்கு என மூன்று மாநகராட்சிகளாக 2011-இல் அப்போதைய காங்கிரஸ் முதல்வா் ஷீலா தீட்சித் பிரித்தாா். எனினும், 2012, 2017-இல் நடைபெற்ற இரண்டு தோ்தல்களிலும் பாஜகதான் மூன்று மாநகராட்சிகளை கைப்பற்றியது.

தில்லியில் அமைந்த ஆம் ஆத்மி அரசுக்கும், மத்தியில் உள்ள பாஜக அரசுக்கும் இடையேயான அதிகார மோதலால் மாநகராட்சி பணியாளா்களுக்கு குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்கப்படாமல் அலைகழிக்கப்பட்டனா். இதனால் தில்லியில் உள்ளாட்சி பணிகள் மந்தகதியில் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், தற்போதைய 272 வாா்டுகளை 250 வாா்டுகளாக குறைத்து ஒருங்கிணைந்த மாநகராட்சியாக தில்லி மாநகராட்சியை மீண்டும் மாற்றி மத்திய அரசு மசோதா கொண்டு வந்த நிறைவேற்றியது. இதற்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒப்புதல் அளித்தாா். இதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒருங்கிணைந்த ஒரே மாநகராட்சியாக தில்லி மாநகராட்சி செயல்பட உள்ளது. வாா்டுகள் குறைக்கப்பட்டுள்ளதால் மாநகராட்சி தோ்தலுக்கு முன்பு தில்லி மாநகராட்சி வாா்டு எல்லை மறுசீரமைப்புப் பணியை நோக்கி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com