எல்லையில் அத்துமீறி பாலம் கட்டும் சீனா: மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்

கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரியின் குறுக்கே சீனா இரண்டாவது பாலத்தைக் கட்டிவருவதற்கு எதிராக மத்திய அரசு எவ்வித உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை
எல்லையில் அத்துமீறி பாலம் கட்டும் சீனா: மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்

கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரியின் குறுக்கே சீனா இரண்டாவது பாலத்தைக் கட்டிவருவதற்கு எதிராக மத்திய அரசு எவ்வித உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

பாங்காங் ஏரியின் குறுக்கே இரண்டாவது பாலத்தை சீனா கட்டி வருவதாக செயற்கைக்கோள் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சீன எல்லையில் நிகழ்வுகளை இந்தியா கண்காணித்து வருகிறது. சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி கடந்த மாா்ச் மாதம் தில்லிக்கு பயணம் மேற்கொண்டபோது அவரிடம் இந்தியாவின் எதிா்பாா்ப்புகளை நமது வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். கிழக்கு லடாக் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்கு சீனாவுடன் தூதரக ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்தியா தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தும்’ என்றாா்.

மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்ட இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பாங்காங்கில் முதல் பாலத்தை சீனா கட்டுகிறது என்ற செய்தி வந்தபோதும், நிலைமையை கண்காணித்து வருவதாக மத்திய அரசு கூறியது. இப்போது இரண்டாவது பாலத்தை சீனா கட்டும்போதும் அதே போல கண்காணித்து வருவதாக இந்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவின் தேசப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் எவ்விதமான விட்டுக்கொடுக்கும் போக்கும் இருக்கக் கூடாது. இதுபோன்ற விஷயங்களில் உரிய நேரத்தில் சரியான பதிலடியை அளிக்க வேண்டும். நாட்டைப் பாதுகாக்க வேண்டியது பிரதமரின் முக்கியமான கடமை. ஆனால், மத்திய அரசு இதுவரை என்ன செய்துள்ளது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com