
கோப்புப்படம்
குஜராத் மாநிலம் அகமதாபாத் மெக்டோனல்ட்ஸ் கடை குளிர்பானத்தில் பல்லி இறந்து மிதந்த விடியோ வைரலானதையடுத்து அந்த கடைக்கு அகமதாபாத் நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது. 4 நண்பர்கள் அகமதாபாத்தில் உள்ள மெக்டோனல்ட்ஸ் கடைக்குச் சென்றுள்ளனர். குளிர்பானத்தை இரண்டுமுறை குடித்த பின்னர் அந்த குளிர்பானத்தில் பல்லி மிதந்துள்ளது. இதனால், அவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். குளிர்பானத்தை அருந்திய பார்கவ் ஜோஷி குளிர்பானத்தில் பல்லி மிதக்கும் விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த விடியோவில் நான்கு நண்பர்களில் ஒருவர் கடையில் வேலை செய்பவரிடம் பல்லி மிதப்பது குறித்து வெகு நேரமாகக் கேட்டுள்ளார். ஆனால், கடையில் பணிபுரியும் நபர் எங்களால் இந்த குளிர்பானத்திற்கான தொகை ரூ.300-ஐ திருப்பியளிக்கத்தான் முடியும் எனக் கூறியதாக கூறப்படுகிறது. அதற்கு ஒரு உயிரின் விலை ரூ.300 தானா என அந்த நான்கு நண்பர்களில் ஒருவர் கேட்டுள்ளார்.
இந்த விடியோ சுட்டுரையில் பலரால் பகிரப்பட்டுள்ளது. அதில் ஒருவர் கூறியதாவது, “ இது மிகவும் மோசமானது. நானும் இது போன்று பல உணவுகளில் தரக்குறைபாடுகளை பார்த்துள்ளேன். பணியாளர்களின் கவனக் குறைவினாலேயே இது போன்ற தவறுகள் நடக்கிறது. உணவு விஷயத்தில் இது போன்ற கவனக் குறைபாடுகளை ஏற்றுக் கொள்ளவே முடியாது எனப் பதிவிட்டுள்ளார்.
பின்னர், அந்தக் கடைக்கு அகமதாபாத் நகராட்சி அலுவர்களால் சீல் வைக்கப்பட்டது. கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ள பார்கவ், இந்த நடவடிக்கையை எடுத்த அகமதாபாத் நகராட்சிக்கு தனது நன்றியினை தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக மெக்டோனல்ட்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெக்டோனல்ட்ஸ் தனது உணவு சுத்தம் மற்றும் சுகாதாரத்தில் ஒரு போதும் கவனக்குறைவாக இருக்காது என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G