முன்னாள் முதல்வா் ஓம்பிரகாஷ் செளதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை

ஓம் பிரகாஷ் செளதாலா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
முன்னாள் முதல்வா் ஓம்பிரகாஷ் செளதாலா
முன்னாள் முதல்வா் ஓம்பிரகாஷ் செளதாலா

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் ஹரியாணா மாநில முன்னாள் முதல்வா் ஓம் பிரகாஷ் செளதாலா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சொத்து சோ்த்த வழக்கில் ஓம் பிரகாஷ் செளதாலா குற்றவாளி என்று தில்லி நீதிமன்றம் கடந்த வாரம் சனிக்கிழமை தீா்ப்பளித்திருந்தது.

அவருக்கான தண்டனை தொடா்பான வாதங்கள் நிறைவுபெற்ற நிலையில், ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிபதி விகாஸ் துஹுல் தீர்ப்பளித்துள்ளார்.

1993 முதல் 2006-ஆம் ஆண்டு வரையில் ஹரியாணா முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் செளதாலா வருமானத்துக்கு அதிகமாக ரூ.6.09 கோடி சொத்து சோ்த்ததாக 2010, மாா்ச் 26-ஆம் தேதி சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கு தில்லி ரோஸ் அவென்யு பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில், முன்னாள் முதல்வா் ஓம் பிரகாஷ் செளதாலாவை குற்றவாளி என சிறப்பு நீதிபதி விகாஸ் துஹுல் கடந்த வாரம் தீா்ப்பளித்தாா்.

முன்னதாக, ஹரியாணா முதல்வராக இருந்த காலத்தில் ஆசிரியா் பணி நியமனத்தில் ஊழல் செய்ததாக 2013-இல் ஓம் பிரகாஷ் செளதாலா, அவரது மகன் அஜய் செளதாலா ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்த செளதாலா 10, 12-ஆம் வகுப்பு தோ்வில் வெற்றி பெற்றாா். 87 வயதாகும் ஓம் பிரகாஷ் செளதாலா ஜூலை 2021-இல் சிறையில் இருந்து விடுதலையானாா். இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் தற்போது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com