கணிதத்தில் சிறந்தவர்கள் மாணவர்களா, மாணவிகளா? - ஆய்வு என்ன சொல்கிறது?

தேசிய அளவில் பள்ளி மாணவர்களின் கல்வித் திறன் குறிப்பாக கணிதத் திறன் குறித்து மத்திய கல்வி அமைச்சகம் ஓர் ஆய்வு நடத்தியுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பள்ளி மாணவர்களின் கணிதத் திறன் குறித்து மத்திய கல்வி அமைச்சகம் ஓர் ஆய்வு நடத்தியுள்ளது. அதில், உயர் வகுப்புகளில் கணிதப் பாடத்தில் மாணவிகளைவிட மாணவர்களின் திறன் அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆரம்ப வகுப்புகளில் மாணவர்கள் மற்றும் மாணவிகளின் கணிதத் திறன் ஏறக்குறையாக சமமாக இருப்பதாகவும் உயர் வகுப்புகள் செல்லசெல்ல மாணவர்களின் கணிதத் திறன் அதிகரிப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி, 720 மாவட்டங்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த 3,5,8 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் சுமார் 34 லட்சம் மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்த அனைத்து தரப்பு மாணவர்களும் இதில் அடங்குவர்.  

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(என்சிஇஆர்டி) தயாரித்த கேள்வித்தாள் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு பதிலளிக்க கேட்கப்பட்டன. 

இதையடுத்து ஆய்வின் முடிவில் சில முக்கிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. 

தொடக்கப் பள்ளிகளில் ஆரம்ப வகுப்புகளில் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் கணித்திறன் ஏறக்குறையாக சம அளவில் இருக்கிறது. உதாரணமாக 3 ஆம் வகுப்பில் மாணவிகளின் சராசரி மதிப்பெண் 301 ஆகவும் மாணவர்களின் சராசரி மதிப்பெண் 300 ஆகவும் இருக்கிறது. 

5 ஆம் வகுப்பில் மாணவிகள்- 280, மாணவர்கள் -281; 8 ஆம் வகுப்பில் இருவரின் சராசரி மதிப்பெண்ணும் சம அளவில் இருக்கிறது, 10 ஆம் வகுப்பில் மாணவிகள் -216; மாணவர்கள் - 219 ஆக உள்ளது. அதாவது வகுப்புகள் அதிகரிக்க, மாணவர்களின் கணிதத் திறன் மேம்படுவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கணிதம் தவிர, மற்ற பாடங்களில் மாணவர்களைவிட மாணவிகள் சிறப்பாக செயல்படுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அடுத்ததாக, சமூக அடிப்படையில் பார்த்தால், பொதுப்பிரிவு மாணவர்களைவிட எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினரின் கல்வித்திறன் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக மாணவ, மாணவியர்களின் கல்வித்திறன் சற்று குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com