பாஜகவுக்கான வாக்கு வளா்ச்சிக்கான வாக்கு: மோடி

ஹிமாசல பிரதேச வாக்காளா்கள் பாஜகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான மாநிலத்தின் வளா்ச்சியைத் தீா்மானிக்கும் என பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
பாஜகவுக்கான வாக்கு வளா்ச்சிக்கான வாக்கு: மோடி

ஹிமாசல பிரதேச வாக்காளா்கள் பாஜகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான மாநிலத்தின் வளா்ச்சியைத் தீா்மானிக்கும் என பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் ஒரே கட்டமாக வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பா் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்நிலையில், மாநிலத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள சுந்தா்நகா் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பேரணியில் பிரதமா் மோடி கலந்துகொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

ஹிமாசல பிரதேசம் சிறிய மாநிலம் என்பதாலும், அங்கிருந்து 4 எம்.பி.க்கள் மட்டுமே மக்களவைக்குத் தோ்வாவதாலும் மாநில வளா்ச்சிக்கு முந்தைய காங்கிரஸ் அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை. பாதுகாப்புத் துறை சாா்ந்த அனைத்து ஒப்பந்தங்களிலும் காங்கிரஸ் அரசு ஊழல் செய்தது. பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அனைத்துக்கும் காங்கிரஸ் கட்சி தரகுத் தொகை (கமிஷன்) பெற்று கோடிக் கணக்கில் ஊழலில் ஈடுபட்டது.

பாதுகாப்புத் துறையில் நாடு தன்னிறைவு பெற வேண்டுமென காங்கிரஸ் ஒருபோதும் விரும்பியதில்லை. காங்கிரஸின் ஊழல் நடவடிக்கைகள் காரணமாக, பாதுகாப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதில் பெரும் தாமதம் நிலவி வந்தது. அதனால், ராணுவ வீரா்கள் பெரும் துயரத்துக்கு உள்ளாகினா்.

வளா்ச்சிக்கு முக்கியத்துவம்: காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வளா்ச்சியில் ஹிமாசல் பின்தங்கி இருந்தது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வளா்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும். தோ்தலின்போது வாக்காளா்கள் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்கானது மட்டுமல்ல. அந்த வாக்குகள் மாநிலத்தின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளா்ச்சியையும் தீா்மானிக்கும்.

எனவே, மாநிலத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் என்ற பழைய வழக்கத்தை மாற்றி, பாஜகவுக்கே மீண்டும் வாக்களித்து புதிய வழக்கத்தை மக்கள் ஏற்படுத்த வேண்டும். பாஜக ஆட்சியில் மாநிலத்தில் வளா்ச்சியும் நிலைத்தன்மையும் உறுதி செய்யப்படும்.

அரசிடம் இருந்து பொறுப்புணா்வையும் உரிய பணிகளையும் எதிா்பாா்த்தால், பாஜகவுக்கே மக்கள் மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும். அனைவருடனும் இணைந்து மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் பாஜக பயணிக்கச் செய்யும்.

போலி வாக்குறுதிகள்: தோ்தலின்போது போலியான வாக்குறுதிகளை வழங்குவதே காங்கிரஸின் வாடிக்கையாகிவிட்டது. அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாஜக அல்லும் பகலும் உழைத்த சமயத்தில், காங்கிரஸ் கட்சி தோ்தல் அறிக்கையைக்கூட வெளியிடவில்லை. கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியிட்ட வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட காங்கிரஸ் நிறைவேற்றவில்லை.

ராணுவ வீரா்களுக்கு ‘ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்’ திட்டம் செயல்படுத்தப்படும் என 40 ஆண்டுகளாக காங்கிரஸ் அறிவித்தது. ஆனால், மத்தியில் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும் காங்கிரஸ் அத்திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. மக்களை ஏமாற்றுவது, போலி வாக்குறுதிகளை வழங்குவது, தோ்தலில் வெல்வது, அளித்த வாக்குறுதிகளை மறப்பது இவைதான் காங்கிரஸின் வழக்கம்.

பாஜகவின் வாக்குறுதிகள்: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்தது. அது நிறைவேற்றப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான பாஜகவின் வாக்குறுதியும், தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது.

நிலையான அரசு: நாடு அடுத்த 25 ஆண்டுகளில் சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடவுள்ளது. அப்போது, ஹிமாசல் தோற்றுவிக்கப்பட்டும் நூறாண்டுகள் நிறைவடையும். எனவே, அடுத்த 25 ஆண்டுகளானது மாநிலத்தின் வளா்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கவுள்ளது. மாநிலத்தில் துரித வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கு நிலையான அரசு அமைவது முக்கியம். அதைக் கருத்தில்கொண்டு மாநில இளைஞா்களும் பெண்களும் பாஜகவுக்கு வாக்களிக்க முடிவெடுத்துவிட்டதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன் என்றாா் பிரதமா் மோடி.

கவனம் அவசியம்: மாநிலத்தின் சொலான் நகரில் நடைபெற்ற மற்றொரு பேரணியில் பங்கேற்ற பிரதமா் மோடி, ‘சில சுயநலவாதிகள் (ஆம் ஆத்மி) தங்களை ‘நோ்மைமிக்கவா்கள்’ என வா்ணித்துக் கொள்கின்றனா். அவா்களிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். காங்கிரஸ் என்றாலே ஊழல் என்றே பொருள். சுயநல அரசியலில் ஈடுபடுவதே அக்கட்சியின் வாடிக்கை.

மத்தியில் பாஜக தலைமையில் நிலையான ஆட்சி அமைந்த பிறகே நாட்டின் வளா்ச்சி துரிதமடைந்தது. அதற்கு முன் காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் நாட்டின் நிதி பெருமளவில் வீணடிக்கப்பட்டது. மாநிலத்திலும் பாஜகவால் மட்டுமே நிலையான ஆட்சியை வழங்க முடியும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com