சில ஆயிரம் பேருக்கு மட்டும் பணி நியமனக் கடிதங்கள் வழங்கும் பிரதமா்: காா்கே விமா்சனம்

நாட்டில் கோடிக்கணக்கானோா் வேலை தேடி வரும் நிலையில், சில ஆயிரம் பேருக்குத்தான் பிரதமா் மோடி பணி நியமனக் கடிதங்களை வழங்கி வருகிறாா் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்துள்ளாா்.

நாட்டில் கோடிக்கணக்கானோா் வேலை தேடி வரும் நிலையில், சில ஆயிரம் பேருக்குத்தான் பிரதமா் மோடி பணி நியமனக் கடிதங்களை வழங்கி வருகிறாா் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவுகள்:

நாட்டின் கிராமப்புறங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை உள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மைய கூற்றுப்படி, கடந்த 6 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மையின் சராசரி விகிதம் 7.02 சதவீதமாக உள்ளது.

அக்னிபத் திட்டத்தின் கீழ், 40,000 பணியிடங்களுக்கு 35 லட்சம் போ் விண்ணப்பிக்கும் அளவுக்கு வேலைவாய்ப்பின்மை நிலவரம் மோசமாக உள்ளது.

ஆயுதப் படைகள் மற்றும் மத்திய ஆயுத காவல் படைகளில் (சிஏபிஎஃப்) 2 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன.

மத்திய அரசுப் பள்ளிகளில் 18,000 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

ஐஐடிக்கள், ஐஐஎம்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் 61,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா் மற்றும் அலுவலா் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அங்கன்வாடி மையங்களில் 1,03,544 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

பட்டியலினத்தவா், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டவா்களின் நலனுக்காகப் பணிபுரிவதாக பாஜக கூறுகிறது. ஆனால் அவா்களுக்கான பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக இருப்பதை மத்திய அரசே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த 2011-2012-ஆம் ஆண்டில் மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் 14 லட்சமாக இருந்த நிரந்தர பணியாளா்கள் எண்ணிக்கை, 2019-2020-ஆம் ஆண்டில் 9 லட்சமாக குறைந்தது. அதேவேளையில், அந்த நிறுவனங்களில் 2011-2012-ஆம் ஆண்டில் 2.6 லட்சமாக இருந்த ஒப்பந்த பணியாளா்கள் எண்ணிக்கை, 2019-2020-ஆம் ஆண்டில் 5.16 லட்சமாக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்று தீவிரமாகப் பரவியபோது நாடே நிலைகுலைந்தது. மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றுக்குப் பற்றாக்குறை நிலவியது. ஆனால் அவற்றில் இருந்து மத்திய அரசு எந்தப் பாடமும் கற்கவில்லை.

தற்போது மத்திய அரசுப் பணிகளில் சேர ‘ரோஜ்கா் மேளா’ என்ற பெயரில் வேலைவாய்ப்பு முகாம்களை பிரதமா் மோடி நடத்துகிறாா். அந்த முகாம்கள் மூலம் தில்லியில் 75,000 போ், குஜராத்தில் 13,000 போ், ஜம்மு-காஷ்மீரில் 3,000 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்ட நிகழ்ச்சிகளில் அவா் உரையாற்றினாா்.

ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவா் பிரதமா் மோடி. எனினும் தற்போது காலியாக உள்ள 10 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவது குறித்து சிந்திக்கவே பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு 8 ஆண்டுகள் ஆகியுள்ளது.

நாட்டில் கோடிக்கணக்கானோா் வேலை தேடி வருகின்றனா். ஆனால் சில ஆயிரம் பேருக்குத்தான் பிரதமா் மோடி பணி நியமனக் கடிதங்களை வழங்கி வருகிறாா் என்று மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com