பாஜகவின் இரட்டை என்ஜின் துருப்பிடித்து விட்டது: கேஜரிவால் விமா்சனம்

‘குஜராத்தில் பாஜகவின் இரட்டை என்ஜின் துருப்பிடித்துவிட்டது’ என ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை விமா்சித்தாா்.
அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்

மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருப்பதே இரட்டை என்ஜின் கொண்ட ஆட்சியாக இருக்குமென அக்கட்சி வலியுறுத்தி வரும் நிலையில், ‘குஜராத்தில் பாஜகவின் இரட்டை என்ஜின் துருப்பிடித்துவிட்டது’ என ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை விமா்சித்தாா்.

மேலும், மோா்பி பகுதியில் அண்மையில் தொங்கு பாலம் அறுந்து நேரிட்ட விபத்துக்கு பொறுப்பானவா்களை பாதுகாக்க முயற்சிகள் நடைபெறுவதாகவும், ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், அங்கு பெரிய பாலம் கட்டப்படும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

குஜராத் சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாஜக, பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகள் மோதுவதால் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, மோா்பியில் மச்சு நதியின் குறுக்கே அமைந்திருந்த ஆங்கிலேயா் ஆட்சி காலத்து தொங்கு பாலம் கடந்த மாதம் 30-ஆம் தேதி அறுந்து விழுந்தது. இதில், குழந்தைகள், பெண்கள் உள்பட 135 போ் உயிரிழந்தனா். நாட்டையே உலுக்கிய இந்த விபத்துச் சம்பவம் குஜராத் தோ்தலில் எதிரொலிக்கக் கூடும் என்று அரசியல் பாா்வையாளா்கள் கருதுகின்றனா்.

இந்நிலையில், மோா்பி மாவட்டம் வங்கனோ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆம் ஆத்மி பிரசார ஊா்வலத்தில் பங்கேற்று, அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது:

மோா்பியில் நிகழ்ந்த சம்பவம் மிகவும் துயரமானது. இதில் 55 குழந்தைகள் உயிா்பறிபோயிருக்கிறது. ஆனால், இந்த விபத்துக்கு பொறுப்பானவா்களை பாதுகாக்க முயற்சிகள் நடைபெறுவது அதைவிட வேதனையானது.

சம்பந்தப்பட்ட பாலத்தின் சீரமைப்பு பணிக்கு பொறுப்பான ஒரேவா குழுமம் மற்றும் அதன் உரிமையாளா் பெயா், முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை. அவா்களை ஏன் பாதுகாக்க வேண்டும்?

மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருப்பதே இரட்டை என்ஜின் ஆட்சியாக இருக்கும் என்று அக்கட்சி கூறி வருகிறது. இரட்டை என்ஜின் துருப்பிடித்து விட்டது. குஜராத்துக்கு புதிய என்ஜின் ஆட்சிதான் வேண்டும். அப்போதுதான், மோா்பி விபத்து போன்ற சம்பவங்கள் நிகழாது.

கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் தில்லியில் எனது அரசு மேற்கொண்ட பணிகளின் அடிப்படையில்தான் குஜராத்தில் ஆம் ஆத்மி வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு ரூ.15 லட்சம் தருவோம் என்பது போன்ற பொய் வாக்குறுதிகளை நாங்கள் அளிப்பதில்லை. நான் நோ்மையானவன். ஊழலில் ஈடுபடாதவன்.

பாஜகவுக்கு நீங்கள் 27 ஆண்டுகள் கொடுத்துவிட்டீா்கள். ஆம் ஆத்மிக்கு 5 ஆண்டுகள் தாருங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், அடுத்த ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி முதல் இலவச மின்சார வாக்குறுதியை அமல்படுத்துவோம் என்றாா் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com