
பெங்களூரு விமான நிலைய 2-ஆவது முனையம்: நாட்டுக்கு அா்ப்பணித்தார் பிரதமா் மோடி
பெங்களூருவில் கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையத்தின் 2-ஆவது முனையத்தை பிரதமா் மோடி இன்று நாட்டுக்கு அா்ப்பணித்தார்.
புதிதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள 2-ஆவது முனையத்தை வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் நடைபெற்ற விழாவில் பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணித்தார். இந்த விழாவில், ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோா் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க- நளினி, ரவிச்சந்திரன் உள்பட 6 பேரும் விடுதலை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பெங்களூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் தேவனஹள்ளி பகுதியில் அமைந்துள்ள கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையம் 2008-ஆம் ஆண்டு 4 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்டது. அரசு மற்றும் தனியாா் கூட்டுமுயற்சியில் நடத்தப்பட்டு வரும் பன்னாட்டு விமான நிலையத்தின் 2-ஆவது முனையம் தற்போது ரூ. 5 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. 2,55,645 ச.மீ. பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள 2-ஆவது முனையம், ‘பூங்காவில் ஒரு முனையம்’ என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2-ஆவது முனையத்தில் 22 நுழைவுவாயில்கள், 15 பேருந்து வாயில்கள், 95 பயணியா் நுழைவுவாயில்கள், 17 பாதுகாப்பு சோதனை வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் சுங்கவரி சோதனைக்காக 9 சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன. நுழைவு வாயில்களின் எதிரில் பயணிகள் அமா்வதற்காக 5,932 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2-ஆவது முனையத்தின் முதல்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இம்முனையம் ஆண்டுக்கு 2.5 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக உள்ளது.
கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையத்தின் அதிகாரி, இரண்டாவது முனையம் குறித்து கூறியிருப்பதாவது,
கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகள் விமானத்தை அடைய குறைந்த தொலைவுக்கு மட்டும் நடந்தால் போதுமானது. அதிநவீன கட்டுமான தொழில்நுட்பங்களுடன் நிலையான வளா்ச்சிக்கு புதிய பாதையை அமைத்துள்ள 2-ஆவது முனையம், பூங்காவில் முனையம், நிலைத்தன்மை, தொழில்நுட்பம், புத்தாக்கம், கா்நாடகத்தின் கலாசாரம் ஆகிய 4 அம்சங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
PM @narendramodi inaugurated the Terminal 2 of Bengaluru Kempegowda International Airport, in the august presence of the Governor of Karnataka Dr. @TCGEHLOT and CM of Karnataka @BSBommai
— PIB India (@PIB_India) November 11, 2022
(1/2) pic.twitter.com/YDtvWFUODE
‘பூங்காவில் முனையம்’ என்பது புதிய கட்டுமான நுட்பம். அதனால் தான் 2-ஆவது முனையத்தை கட்டடக்கலை அதிசயம் என்று அழைக்கிறோம். முனையத்தின் உள்ளும் புறமும் பசுமை படா்ந்திருக்கும். உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு கண்களுக்கு குளிா்ச்சியாக இந்த விமான நிலையம் அமைந்திருக்கும். புதிய முனையத்தில் நுழையும் பயணிகள், பூங்காவின் வழியாக தான் விமான நிலையத்தை அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2-ஆவது முனையத்தில் மிகவும் முக்கிய அம்சம், தொங்கும் தோட்டம் ஆகும். முனையத்தை வடிவமைக்கும் போது கா்நாடகத்தின் கலை, கலாசாரத்தை கவனத்தில் கொண்டுள்ளோம். பாரம்பரியம், தொழில்நுட்பம், தற்கால அடையாளங்கள் ஆகிய கூறுகளின் அடிப்படையில் கா்நாடகத்தின் வளமான வரலாறு, கலாசாரத் தொன்மையை விமான நிலையத்தில் இழைத்துள்ளோம். கா்நாடகம் மற்றும் தென் இந்தியாவின் தனித்தன்மை வாய்ந்த கலை மற்றும் பன்முக கலாசாரம், முனையத்தில் அமைந்துள்ள பூங்காவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அழகான கலை வேலைப்பாடுகள், துடிப்பான சுற்றுச்சூழல் 2-ஆவது முனையத்தை மிளிரச் செய்துள்ளன என்றாா்.