வனப் பாதுகாப்பு-பழங்குடி இனத்தவரிடம் கற்க வேண்டியது அவசியம்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

வனப் பாதுகாப்பு குறித்து பழங்குடி இனத்தவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தினார்.
வனப் பாதுகாப்பு-பழங்குடி இனத்தவரிடம் கற்க வேண்டியது அவசியம்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

வனப் பாதுகாப்பு குறித்து பழங்குடி இனத்தவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தினார்.
 பழங்குடி இனத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்த தினமான நவ. 15-ஆம் தேதி "பழங்குடி இனத்தவர் கௌரவ தினம்' கொண்டாடப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி மத்திய பிரதேசத்தின் ஷாடோல் மாவட்டத்தில் பழங்குடி இனத்தவர் கௌரவ தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசியது:
 தற்போது பருவநிலை மாற்றமும், புவி வெப்பமயமாதலும் உலகுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. இந்தச் சூழலில் பழங்குடி இனத்தவரின் வாழும் முறை குறித்தும் வனப் பாதுகாப்பில் அவர்கள் உறுதிபூண்டுள்ளது குறித்தும் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
 பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வனப் பகுதிகளைப் பாதுகாக்க பழங்குடி இனத்தவர் போராடினர். இதற்காக அவர்கள் உயிர்த் தியாகமும் செய்தனர்.
 மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் பழங்குடி சமூகம் சமமான முக்கியத்துவத்தை அளிக்கிறது. பழங்குடியின சமூகத்தில் தனிநபர்களைவிட குழுக்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. ஒருவருடன் ஒருவர் போட்டியிடுவதைவிட ஒத்துழைத்து வாழ்வதற்கு முன்னுரிமை தரப்படுகிறது. மற்ற சமூகங்களைக் காட்டிலும் பழங்குடி சமூகத்தில் பாலின விகிதம் சிறப்பாக உள்ளது.
 பழங்குடி இனத்தவர் நலனுக்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தனி அமைச்சகத்தை உருவாக்கினார். நாட்டில் உள்ள பழங்குடி இனப் பகுதிகளின் மேம்பாட்டுக்கு இது முக்கியப் பங்காற்றி வருகிறது.
 பழங்குடி இனத்தவரின் இயற்கை சார்ந்த வாழ்வியல் முறை பாராட்டுக்குரியது. இது வனப் பகுதிகளையும் இயற்கையின் வளங்களையும் பாதுகாக்க உதவுகிறது.
 பழங்குடி இனத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் சொந்த கிராமமான ஜார்க்கண்ட் மாநிலம், உலிஹாடுவில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரது பிறந்த இடமும் பணியாற்றிய இடங்களுக்கும் செல்வது என்னைப் பொருத்தவரை புனித இடங்களுக்குச் செல்வது போன்றதாகும்.
 பழங்குடி இனத்தவர் சுரண்டப்படுவதைத் தடுக்க பெசா சட்டத்தைக் கொண்டு வந்து மத்திய பிரதேச அரசு அமல்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது. பழங்குடி இனப் பகுதிகளில் உள்ள கிராம சபைகளுக்கு இச்சட்டம் விசேஷ அதிகாரங்களை அளிக்கிறது என்றார்.
 இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, ஃபக்கன் சிங் குலஸ்தே, மத்திய பிரதேச ஆளுநர் மங்கு பாய் படேல், முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோரும் உரையாற்றினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com