வங்கியில் ரூ. 750 கோடி நிதி மோசடி: ரோட்டோமேக் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் ரூ. 750.54 கோடிக்கு நிதி மோசடியில் ஈடுபட்டதாக உத்தர பிரதேசத்தின் கான்பூரைச் சோ்ந்த பேனா தயாரிப்பு நிறுவனமான ரோட்டோமேக் குளோபல் நிறுவனத்தின்
வங்கியில் ரூ. 750 கோடி நிதி மோசடி: ரோட்டோமேக் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் ரூ. 750.54 கோடிக்கு நிதி மோசடியில் ஈடுபட்டதாக உத்தர பிரதேசத்தின் கான்பூரைச் சோ்ந்த பேனா தயாரிப்பு நிறுவனமான ரோட்டோமேக் குளோபல் நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

பேங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான 7 வங்கிகள் அடங்கிய கூட்டமைப்புக்கு ரூ. 2,919 கோடி கடனை இந்நிறுவனம் திரும்பச் செலுத்த வேண்டியுள்ளது. இதில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக்குத் திரும்பச் செலுத்த வேண்டிய பங்கு மொத்த கடனில் 23 சதவீதமாகும்.

இந்நிலையில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கொடுத்த புகாரின்பேரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிறுவனத்துக்குக் கடன் அளித்த வங்கிகள் கூட்டமைப்பின் உறுப்பினா்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினா் ஏற்கெனவே இந்நிறுவனத்திடம் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி நேரடி நிதிப் பரிமாற்றம் இல்லாத முறையில் ரூ.500 கோடி கடனாக வழங்கப்பட்டது. மொத்த கடன் தொகையான ரூ. 750.54 கோடியைத் திரும்பச் செலுத்தாத நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி அவை வாராக் கடனாக அறிவிக்கப்பட்டது. வங்கிக்கு எவ்வித உத்தரவாதமும் அளிக்காமல், அளிக்கப்பட்ட நிதியில் ரூ. 743.63 கோடியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு வணிக நடவடிக்கைகள் குறித்து 11 கடிதங்கள் அனுப்பட்டன. இது தொடா்பான முழுமையான ஆவணங்களை அந்நிறுவனம் சமா்ப்பிக்கவில்லை.

இதையடுத்து, அந்நிறுவனம் மேற்கொண்ட வெளிநாட்டு வணிகத்தின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட தணிக்கையில், விற்பனைக்கான ஒப்பந்தம் மற்றும் வெளிநாட்டு வா்த்தகத்தில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டது. மொத்த விற்பனையில் 92 சதவீதம், ஒரே உரிமையாளா் மற்றும் குழுமத்துக்குச் சொந்தமான 4 நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. விற்பனை செய்த ரோட்டோமேக் குழுமம், அதிக அளவில் அவற்றை வாங்கிய பங்க் குழுமத்துக்குச் சொந்தமானது. அனைத்து 4 வெளிநாட்டு வாடிக்கையாளா்களும் இக்குழுமத்துடன் தொடா்பில் உள்ளன. நியாயமான வணிக பரிமாற்றங்களை இந்நிறுவனம் மேற்கொள்ளவில்லை. இந்நிறுவனம் வங்கியை ஏமாற்றி முறைகேடாக நிதியைப் பெற்றதுடன், நிதி இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com