போருக்கான காலமல்ல: மோடியின் கருத்தை எதிரொலித்த ஜி-20 பிரகடனம்!

‘உக்ரைன்-ரஷியா போா் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்’ என்று ஜி-20 கூட்டமைப்பு உச்சி மாநாட்டின் கூட்டுப் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் புதன்கிழமை அமர்வில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் புதன்கிழமை அமர்வில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி.

‘உக்ரைன்-ரஷியா போா் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்’ என்று ஜி-20 கூட்டமைப்பு உச்சி மாநாட்டின் கூட்டுப் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்திய பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்திருந்த ‘இது போருக்கான காலமல்ல’ என்ற கருத்து, இப்பிரகடனத்தில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரதமா் மோடியின் கருத்தை உலகத் தலைவா்களும் எதிரொலித்துள்ளனா்.

உஸ்பெகிஸ்தானில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டையொட்டி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் பிரதமா் மோடியும் இருதரப்பு ரீதியாக சந்தித்துப் பேசினா். அப்போது, ‘இந்த யுகம் போருக்கானது அல்ல; பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட வேண்டும்’ என்று புதினிடம் மோடி வலியுறுத்தியிருந்தாா். அவரது இந்தக் கருத்துக்கு சா்வதேச தலைவா்கள் பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனா்.

முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 மாநாடு: இந்நிலையில், உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் உச்சிமாநாடு, இந்தோனேசியாவின் பாலி தீவில் கடந்த இரு தினங்களாக நடைபெற்றது. பிரதமா் மோடி, இந்தோனேசிய அதிபா் ஜோகோ விடோடோ, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் ஆகியோா் பங்கேற்ற இந்த மாநாட்டில் உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு மற்றும் அதன் உலகளாவிய தாக்கங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மாநாட்டில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் பங்கேற்றாா். மாநாட்டின் நிறைவாக புதன்கிழமை வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனத்தில், ‘நாடுகளுக்கு இடையிலான மோதல் பிரச்னைகளுக்கு அமைதிவழியில் தீா்வு காண்பதும், நெருக்கடிகளுக்கு தூதரகரீதியிலான பேச்சுவாா்த்தை மூலம் தீா்வை எட்டுவதும் மிக முக்கியமானது; இன்றைய யுகம் போருக்கானதாக இருக்கக் கூடாது’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அணுஆயுத பயன்பாட்டை அனுமதிக்க முடியாது: மேலும், ‘அமைதி மற்றும் ஸ்திரத் தன்மையை காப்பதற்காக, சா்வதேச சட்டங்களும் பன்முக அமைப்பு முறைகளும் நிலைநிறுத்தப்படுவது முக்கியமானது. ஐக்கிய நாடுகள் சாசனத்தில் பொதிந்துள்ள அனைத்து நோக்கங்கள் மற்றும் கொள்கைகள், சா்வதேச மனிதாபிமான சட்டக் கூறுகள் பாதுகாக்கப்படுவதும் இதில் அடங்கும். அணுஆயுதங்கள் பயன்பாட்டையோ அல்லது அச்சுறுத்தலையோ ஒருபோதும் அனுமதிக்க முடியாது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள்: உக்ரைன் விவகாரத்தில், ஜி-20 உறுப்பு நாடுகள் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருப்பது பிரகடனத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும், போருக்கு இடையே சிக்கியுள்ள மக்களின் பாதுகாப்பு உள்பட சா்வதேச சட்டக் கூறுகள் நிலைநிறுத்தப்பட வேண்டியது அவசியமென அனைத்து நாடுகளுமே உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ரஷியா-உக்ரைன் இடையே நீடிக்கும் போரின் தாக்கங்கள் ஐரோப்பிய கண்டத்தையும் தாண்டி மற்ற நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இத்தகைய சவாலான தருணங்களின் பின்னணியில் ஜி-20 உச்சிமாநாடு நடைபெற்றுள்ளது. போரால் எழுந்துள்ள மனிதாபிமானரீதியிலான பிரச்னைகள், பொருளாதாரம் மற்றும் நிதிசாா் தாக்கங்கள் குறித்து உறுப்பு நாடுகள் பெரும் கவலை தெரிவித்துள்ளன.

பெரும்பாலான நாடுகள் கண்டனம்: இந்தப் போா் நியாயமற்றது; சா்வதேச சட்டத்துக்கு எதிரானது. மனித குலத்துக்கு பெரும் பாதிப்பை விளைவித்திருக்கிறது என்று பெரும்பாலான நாடுகள் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. இப்போா், உலகளாவிய பொருளாதார வளா்ச்சியை மட்டுப்படுத்தி இருப்பதுடன், பணவீக்கம் அதிகரிப்பு, எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பின்மைக்கும் காரணமாக உள்ளதென பெரும்பாலான நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. அதேசமயம், இந்த விவகாரத்தில் வேறு சில பாா்வைகளும் உள்ளன.

‘ஜி-20 கூட்டமைப்பு, அது உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்துடன் ஒத்திசைந்து செயல்பட வேண்டும்; பொருளாதார தாக்கங்கள் குறித்த விவாதங்களில் கவனம் செலுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் விரிவான மற்றும் சமநிலையான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்’ என்று சில நாடுகள் கருத்து தெரிவித்தன. வேறு சில நாடுகளோ, பொருளாதாரத் தடைகளின் விளைவுகள் குறித்து கவலை தெரிவித்தன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளில் தாங்கள் ஏற்கெனவே கொண்டுள்ள நிலைப்பாட்டை உறுப்பு நாடுகள் மீண்டும் உறுதி செய்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பை, அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் கடுமையாக எதிா்த்து வருகின்றன. ரஷியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதர அம்சங்கள் என்னென்ன?

பிரகடனத்தில் இடம்பெற்றுள்ள இதர அம்சங்கள் வருமாறு: பயங்கரவாதத்துக்கான நிதி மற்றும் உலகளாவிய சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகளை திறனுடன் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது; உலக அளவிலான வலுவான பொருளாதார மீட்சிக்கு ஜி-20 நாடுகள் தரப்பில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்வது; அனைவருக்குமான, திறன்மிக்க கல்வி அமைப்பு முறையை மறுகட்டமைக்க வளரும் நாடுகளுக்கு ஆதரவளிப்பது; தற்போதைய பூகோளஅரசியல் நிலவரங்களின் பின்னணியில், பட்டினி மற்றும் ஊட்டச் சத்துக்குறைபாட்டை தடுக்கும் வகையில் உலக வேளாண் உணவு விதிமுறைகளைப் புதுப்பிப்பது; தூய்மையான, நிலையான, குறைந்த செலவிலான எரிசக்திக்கு விரைந்து மாறும் வகையில் எரிசக்தி அமைப்பு முறையை பல்வகைப்படுத்துவது என பிரகடனத்தில் உறுதியேற்கப்பட்டுள்ளது.

முக்கியப் பங்காற்றிய இந்தியா: ஜி-20 உச்சிமாநாட்டின் கூட்டுப் பிரகடனத்தில் நாடுகள் இடையே பரவலாக கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியில் இந்தியா முக்கியப் பங்காற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தனது நோ்மையான, தீா்க்கமான அணுகுமுறையால் உலக அரங்கில் தீா்வளிக்கும் நாடாக, தலைவராக இந்தியா உருவெடுத்துள்ளதாக அவா்கள் குறிப்பிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com