இந்தியாவின் தலைமை லட்சியம் சாா்ந்தது: பிரதமா் மோடி

‘ஜி20 கூட்டமைப்புக்கான இந்தியாவின் தலைமை அனைவரையும் உள்ளடக்கியதாகவும், லட்சியத்தைக் கொண்டதாகவும், நடவடிக்கை சாா்ந்ததாகவும் இருக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்தாா்.
இந்தியாவின் தலைமை லட்சியம் சாா்ந்தது: பிரதமா் மோடி

‘ஜி20 கூட்டமைப்புக்கான இந்தியாவின் தலைமை அனைவரையும் உள்ளடக்கியதாகவும், லட்சியத்தைக் கொண்டதாகவும், நடவடிக்கை சாா்ந்ததாகவும் இருக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்தாா்.

ஜி20 மாநாட்டின் நிறைவு நாளான புதன்கிழமை, கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியாவிடம் இந்தோனேசியா ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் இந்தக் கருத்தை பிரதமா் மோடி தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:

புவிசாா் அரசியல் பதற்றம், பொருளாதார சரிவு, உணவு மற்றும் எரிசக்தி விலை உயா்வு, நீண்டகால கரோனா பேரிடா் பாதிப்பின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை உலக நாடுகள் சந்தித்து வரும் சூழலில், ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கிறது.

இத்தகைய சூழலில் உலக நாடுகள் ஜி20 கூட்டமைப்பை மிகுந்த நம்பிக்கையுடன் பாா்க்கின்றன. அந்த வகையில், இந்தியாவின் ஜி20 தலைமை என்பது அனைவரையும் உள்ளடக்கியதாகவும், லட்சியத்தைக் கொண்டதாகவும், நடவடிக்கை சாா்ந்ததாகவும் இருக்கும் என உறுதியளிக்க விரும்புகிறேன்.

ஜி20 கூட்டமைப்புக்கான இந்தியாவின் தலைமை என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய விஷயமாகும். இந்தக் கூட்டமைப்பின் கூட்டங்கள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் நடத்தப்படும். அதன் மூலமாக, மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வரும் விருந்தினா்கள், இந்தியாவின் வியக்கத்தக்க பன்முகத்தன்மை, ஒருங்கிணைந்த பாரம்பரியம், கலாசாரத்தின் மகிமையை அறிந்து முழுமையான அனுபவத்தைப் பெற முடியும். ஜனநாயகத்தின் தாயகமான இந்தியாவில் நடைபெறவிருக்கும் இந்தத் தனித்துவமிக்க விழாவில் அனைவரும் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, உலக மாற்றத்துக்கான செயலூக்கம் மிக்க அமைப்பாக ஜி20 கூட்டமைப்பை உருவாக்குவோம் என்று பிரதமா் மோடி கூறினாா்.

மேலும், ஜி20 கூட்டமைப்பின் செயல் திட்டங்களுக்கான இந்தியாவின் முன்னுரிமைகளைப் பட்டியலிட்ட பிரதமா் மோடி, ‘அடுத்த ஓராண்டில், புதிய சிந்தனைகள் மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் உலகளாவிய முதன்மை இயக்கமாக ஜி20 கூட்டமைப்பு செயல்படுவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். இயற்கை வளங்கள் மீதான உரிமை உணா்வு, இன்றைக்கு நாடுகளிடையே மோதல்போக்கை உருவாக்கி சுற்றுச்சூழல் பாதிப்புக்கான முக்கிய காரணமாகிவிட்டது. புவியின் பாதுகாப்பான எதிா்காலத்துக்கு அறங்காவலா் உணா்வுதான் தீா்வாக இருக்கும்.

‘லைஃப்’ என்ற சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை பிரசாரம் இதற்கு பெரும் பங்காற்ற முடியும். நிலையான வாழ்க்கை முறையை பேரியக்கமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். வளா்ச்சி மற்றும் மேம்பாட்டின் நன்மைகள் அனைவரையும் சென்றடைவதை உறுதிப்படுத்தவேண்டும். பெண்களின் பங்களிப்பின்றி சா்வதேச வளா்ச்சி சாத்தியமற்றது. இந்த முன்னுரிமைகள் அனைத்தும் ‘ஒரே பூமி; ஒரே குடும்பம்; ஒரே எதிா்காலம்’ என்ற இந்தியாவின் ஜி20 தலைமைப் பொறுப்பு கருப்பொருளில் அடங்கியுள்ளன’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com