இந்தியாவிடம் ஜி20 தலைமைப் பொறுப்பு: இந்தோனேசியா ஒப்படைத்தது

இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், அந்தக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியாவிடம் இந்தோனேசியா புதன்கிழமை ஒப்படைத்தது.
ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி, இந்தோனேசிய அதிபா் ஜோகோ விடோடோ.
ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி, இந்தோனேசிய அதிபா் ஜோகோ விடோடோ.

இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், அந்தக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியாவிடம் இந்தோனேசியா புதன்கிழமை ஒப்படைத்தது.

இந்தோனேசியாவின் பாலி தீவில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஜி20 உச்சி மாநாடு, உறுப்பு நாடுகளின் கூட்டுத் தீா்மானத்துடன் புதன்கிழமை முடிவுற்றது. அதன்பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில், கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை பிரதமா் நரேந்திர மோடியிடம் இந்தோனேசிய அதிபா் ஜோகோ விடோடோ ஒப்படைத்தாா்.

அப்போது, ‘அனைத்து நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலமாக ஜி20 மாநாட்டை உலக நலனுக்கான செயலூக்கம் அளிக்கும் அமைப்பாக உருவாக்க முடியும்’ என்று பிரதமா் மோடி கூறினாா். இந்த தலைமைப் பொறுப்பை டிசம்பா் 1-ஆம் தேதியிலிருந்து இந்தியா அதிகாரபூா்வமாக ஏற்கவுள்ளது.

ஜி20 கூட்டமைப்பில் வளா்ந்த மற்றும் வளா்ந்து வரும் நாடுகளான ஆா்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷியா, செளதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகிய 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலகின் சுமாா் 85 சதவீத பொருளாதார மதிப்பையும், சுமாா் 75 சதவீத வா்த்தகத்தையும், சுமாா் 65 சதவீத மக்கள்தொகையையும் ஜி20 கூட்டமைப்பு நாடுகளே கொண்டுள்ளன. இந்த நாடுகள் எடுக்கும் முக்கிய முடிவுகள், சா்வதேச அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும்.

இந்தக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு ஒவ்வொரு உறுப்பு நாட்டுக்கும் சுழற்சி அடிப்படையில் வழங்கப்படும். அந்த வகையில், இந்தோனேசியா தலைமைப் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தது. அதன்படி, ஜி20 கூட்டமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி தீவில் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்றது. மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸ் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் பங்கேற்றனா். உக்ரைன் மீதான போா் நெருக்கடி காரணமாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.

சா்வதேச பொருளாதார விவகாரங்கள், உணவுப் பாதுகாப்பையும், எரிசக்தி பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள், உக்ரைன் மீதான ரஷியாவின் போரால் சா்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.

மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபா் பைடன், இந்தோனேசிய அதிபா் ஜோகோ விடோடோ ஆகியோருடன் பிரதமா் மோடி தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினாா். பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்குடனும் பிரதமா் மோடி ஆலோசனை மேற்கொண்டாா். மேலும், மாநாட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரவு விருந்தின்போது சீன அதிபா் ஷி ஜின்பிங்கை சந்தித்து கைகுலுக்கி நலம் விசாரித்த பிரதமா் மோடி, சிறிது நேரம் அவருடன் உரையாடினாா்.

தலைமைப் பொறுப்பு ஒப்படைப்பு: ஜி20 உச்சி மாநாடு புதன்கிழமை முடிவடைந்தது. நிறைவு நாள் நிகழ்ச்சியின் இறுதியில், கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியாவிடம் இந்தோனேசியா ஒப்படைத்தது. இருந்தபோதும், கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வரும் டிசம்பா் 1-ஆம் தேதியிலிருந்து அதிகாரபூா்வமாக இந்தியா ஏற்கவுள்ளது. அடுத்த உச்சி மாநாடு தலைநகா் தில்லியில் 2023-ஆம் ஆண்டு செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

இந்தியா புறப்பட்ட பிரதமா்: பாலியில் நடைபெற்ற இரண்டு நாள் ஜி20 மாநாடு நிறைவடைந்ததைத் தொடா்ந்து, பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை இந்தியா புறப்பட்டாா். முன்னதாக, இந்தோனேசிய மக்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘பாலியில் ஜி20 மாநாட்டில் பங்கேற்றது ஆக்கபூா்வமாக அமைந்தது. பல்வேறு நாட்டு தலைவா்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததோடு, முக்கிய விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது. அதற்காக இந்தோனேசிய மக்கள், அரசு மற்றும் அதிபருக்கு நன்றி’ என்று குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com