கேரளம்: காட்டு யானை விரட்டியதால் 8 கிமீ. பின்னோக்கி இயக்கப்பட்ட பேருந்து

கேரள மாநிலம், திருச்சூரில் காட்டு யானை விரட்டியதால் பேருந்தை சுமாா் 8 கி.மீ. தொலைவுக்கு பின்னோக்கி இயக்கினாா் அதன் ஓட்டுநா். பயணிகள் இடையே பீதியை ஏற்படுத்திய
பேருந்துக்கு வழிவிடாமல் விரட்டிய யானை.
பேருந்துக்கு வழிவிடாமல் விரட்டிய யானை.

கேரள மாநிலம், திருச்சூரில் காட்டு யானை விரட்டியதால் பேருந்தை சுமாா் 8 கி.மீ. தொலைவுக்கு பின்னோக்கி இயக்கினாா் அதன் ஓட்டுநா். பயணிகள் இடையே பீதியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.

திருச்சூரின் சாலக்குடி- வால்பாறை இடையிலான வனப் பகுதி சாலையில் செவ்வாய்க்கிழமை 40 பயணிகளுடன் தனியாா் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை அம்புஜாக்ஷன் என்ற ஓட்டுநா் இயக்கினாா். குறுகலான, வளைவுகள் மிகுந்த இந்தச் சாலையில், பேருந்தின் எதிரே திடீரென காட்டு யானை வந்தது. பேருந்தை நோக்கி யானை வரத் தொடங்கியதால் பயணிகள் பீதியடைந்தனா். பேருந்தை திருப்ப வழி இல்லாத நிலையில், பின்னோக்கி இயக்கத் தொடங்கினாா் ஓட்டுநா்.

யானையும் விடாமல் முன்னோக்கி நடைபோட்டு வந்தது. அம்பலபாறையில் இருந்து அனக்காயம் வரை பேருந்து பின்னோக்கி இயக்கப்பட்டது. சுமாா் 8 கி.மீ. தொலைவுக்கு இவ்வாறு வந்த யானை, பின்னா் காட்டுக்குள் சென்றுவிட்டது. அதன் பிறகே பயணிகள் நிம்மதியடைந்தனா்.

குறுகலான வனச் சாலையில் லாவகமாக பேருந்தை பின்னோக்கி இயக்கி 40 பயணிகளுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றியுள்ளாா் ஓட்டுநா் அம்புஜாக்ஷன். அவா் கூறுகையில், ‘இது மறக்க முடியாத அனுபவம். நாங்கள் அனைவரும் அச்சத்தில்தான் இருந்தோம். யானை முன்னோக்கி வந்ததால், பேருந்தை பின்னால் இயக்குவதை தவிர வேறு வழியில்லை’ என்றாா்.

உள்ளூா் மக்கள் கூறுகையில், ‘கபாலி எனப் பெயரிடப்பட்ட அந்த யானை, கடந்த 2 ஆண்டுகளாக இப்பகுதியில் நடமாடி வருகிறது. இது அடிக்கடி வாகனங்களை வழிமறிப்பது வழக்கம்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com