'ராஜீவ் குற்றவாளிகளை விடுவித்தது போல.. என்னை விடுவியுங்கள்' உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்தது போல, என்னையும் விடுவியுங்கள் என்று சுவாமி ஷ்ரத்தானந்தா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
'ராஜீவ் குற்றவாளிகளை விடுவித்தது போல.. என்னை விடுவியுங்கள்' உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு
'ராஜீவ் குற்றவாளிகளை விடுவித்தது போல.. என்னை விடுவியுங்கள்' உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு


புது தில்லி: ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்தது போல, என்னையும் விடுவியுங்கள் என்று சுவாமி ஷ்ரத்தானந்தா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மனைவியை சொத்துக்காகக் கொலை செய்து, மரண தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு, சாகும் வரை பரோல் எதுவும் வழங்கப்படாமல், ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 80 வயதான சுவாமி ஷ்ரத்தானந்த் சார்பில், அவரது வழக்குரைஞர் வருண் தாகூர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, ஜே.பி. பர்டிவாலா ஆகியோர் அடங்கிய அமர்பு முன்பு, வருண் தாகூர் தாக்கல் செய்த மனுவில், ஒரு கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு, நிவாரணமோ பரோலோ வழங்காமல், சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஷ்ரத்தானந்தா, ஒரு நாள் கூட பரோல் கிடைக்காமல், கடந்த 29 ஆண்டுகளை சிறையில் கழித்துவிட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் தண்டனை பெற்ற குற்றவாளிகள், 1991ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 16 பேர் உயிரிழக்கவும், 43 பேர் காயமடையவும் காரணமாக இருந்தவர்கள். இவர்களுக்கு பரோலும் அளிக்கப்பட்டு, 30 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டதால் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு தனித்துவமான வழக்கு, இங்கு சம உரிமை எனும் சட்டம் மீறப்படுகிறது என்று தனது வாதத்தை எடுத்துரைத்திருந்தார்.

இதைக் கேட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, மனுவை விரைவில் விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தது.

மேலும் தாகூர் தாக்கல் செய்த மனுவில், தனது மனுதாரர் 90 வயது ஆனவர். கடந்த 1994ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி என்ற அடிப்படையில் அவர் சுமார் 3 ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். வயோதிகம் காரணமாக ஏராளமான உடல்நலப் பிரச்னைகளையும் சந்தித்து வருகிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

என்ன வழக்கு?
மைசூரு முன்னாள் திவான் சர் மிர்சா இஸ்மாயிலின் பேத்தி ஷகேரே, 1986ஆம் ஆண்டு ஷ்ரத்தானந்த்தை மணந்தார். தனது கணவர் அக்பல் கலீலுடனான (ஆஸ்திரேலியா மற்றும் ஈரானுக்கான முன்னாள் இந்திய தூதர்) 21 வருட வாழ்க்கை முடிந்து விவாகரத்து பெற்ற நிலையில், இரணடாவதாக ஷ்ரத்தானந்த்தை மணந்தார். ஷகேரேவுக்குச் சொந்தமான ரூ.600 கோடி சொத்துக்களுக்காக அவர் 1991ஆம் ஆண்டு விஷ ஊசி செலுத்தப்பட்டு, உயிரோடு புதைக்கப்பட்டார்.  இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து 1994ஆம் ஆண்டு ஷ்ரத்தானந்த் கைது செய்யப்பட்டு, 2000-ஆவது அண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு, 2005ஆம் ஆண்டில் கர்நாடக உயர் நீதிமன்றம் மரண தண்டனை உறுதி செய்ய, 2008ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு, அவரது ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று தண்டனை பிறப்பிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com